மதுரை: வைகை ஆற்றில் இறங்கி அன்பர்களுக்கு அருள் பாலிப்பதற்காக, அழகர்மலையில் இருந்து மதுரை நோக்கிப் புறப்பட்டார் கள்ளழகர். அழகர் மலையில் கூடியிருந்த பக்தர்கள் பரவசத்தில் பலத்த கோஷம் எழுப்பினர்.
மதுரைக்கு வரும் அழகரை ஆங்காங்கே எதிர்சேவை செய்து கோவிந்தா முழக்கமிட்டு பக்தர்கள் வரவேற்கின்றனர். காணும் திசை எங்கும் கோவிந்தா முழக்கம்தான். பக்தர்களின் பக்தி கோஷம் காண்போரை உணர்ச்சிகரமாக்குகிறது. சிலரின் பக்தர்களின் அதீத பக்தியின் வெளிப்பாடு மெய் சிலிர்க்கவைக்கிறது.
கள்ளழகர் கோயில் மதில் சுவர் முகப்பு வழியே வெளியே வந்த போது, அன்பர்கள் பலர் ஆடிப் பாடி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். அப்போது விண்ணை பிளக்கும் அதிர்வேட்டுகள் முழங்கின. அது மதுரை நகர் வரை எட்டியது. சித்திரைத் திருவிழாவைக் காண தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருக்கும் பக்தர்களுக்கு அந்த அதிர்வேட்டுச் சத்தம், மதுரை நோக்கிய கள்ளழகரின் புறப்பாட்டை கோடிட்டுக் காட்டியது.
மதுரை சித்திரைத் திருவிழாவைக் காண வெவ்வேறு இடங்களில் இருந்தும் வந்து குவிந்திருக்கும் பக்தர்களைக் காண அழகரும் பட்டுடுத்தி தங்கப் பல்லக்கில் அழகர் மலையில் இருந்து தனது பரிவாரங்களுடன் மதுரை நோக்கிப் புறப்பட்டார். ஆலயத்தின் கோட்டை வாசலை விட்டு வெளியே வந்த கள்ளழகர், அங்கே கோபுர வாசல் கதவில் எழுந்தருளியிருக்கும் கருப்பண்ணசாமி சந்நிதி அருகேயுள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அங்கே நடைபெற்ற சிறப்பு பூஜைக்குப் பின்னர், இரவு பொய்கைக் கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி வழியாக சுந்தர்ராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் நள்ளிரவு 1 மணிக்கு எழுந்தருளுகிறார். காதக்கிணறு, கடச்சனேந்தல், சர்வேயர் காலனி வழியாக மூன்று மாவடிக்கு வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு எதிர்சேவை செய்கின்றனர். தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இளைப்பாறும் அழகர் 30ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார்.