நெல்லை: இன்று தமிழகத்தை உலுக்கியெடுத்த ஒரு நிகழ்வு, மாணவன் தினேஷின் தற்கொலைச் சம்பவம். திருநெல்வேலி ரயில் பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தினேஷ், தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் வேண்டுகோள், தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான தாய்மார்களின் உணர்வுபூர்வமான வேண்டுகோள்.
டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி தினேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளான். அதில் அவன், இந்தியாவில் பிரதமர், தமிழகத்தில் முதலமைச்சர் அவர்கள் இனியாவது மதுபான கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம் என நொந்து போய் எழுதிவைத்திருக்கிறான். இதன் மூலம் அவன் விடுக்கும் வேண்டுகோள் நிச்சயம் பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் எடப்பாடிக்கும் கேட்டாக வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் தினேஷ், 12ம் வகுப்பு மாணவர். மாடசாமி கடந்த சில வருடங்களாக குடி கெடுக்கும் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால், தினேஷ் பெரும் சிரமத்தைச் சந்தித்துள்ளார். அவர்களின் குடும்பமும் வறுமையில் சிரமப் பட்டுள்ளது. மேலும், தினேஷாலும் சரியாக படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போயுள்ளது. இன்னும் சில நாட்களில் நடக்கவுள்ள நீட் தேர்வை எதிர்கொள்ள எவ்வளவோ முயன்றும், அதில் கவனம் செலுத்த முடியாமல் போயுள்ளது.
இந்த நிலையில் தினேஷ் இன்று திருநெல்வேலி தெற்கு புறவழிச் சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முன்னதாக, ரயில்வே மேம்பாலத்தில் புதன்கிழமை இன்று காலை, மாணவர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளது கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, பாளையங்கோட்டை போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் தினேஷின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேம்பாலத்தில் தொங்கியபடி இறந்து கிடந்ததால் யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என தொடக்கத்தில் போலீஸார் சந்தேகம் அடைந்தனர். பின்னர் தினேஷின் சட்டைப் பையில் இருந்து கடிதம் ஒன்று இருந்ததைக் கண்டு அதனை எடுத்துப் படித்துப் பார்த்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்தக் கடிதத்தில், தன்னுடைய இறப்புக்குப் பிறகாவது தன் தந்தை குடிக்கக் கூடாது என எழுதப்பட்டிருந்தது.
மேலும், “என் இறப்புக்குப் பிறகாவது நீ (தந்தை) குடிக்காமல் இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை. எனக்கு நீ கொள்ளி வைக்கக் கூடாது. காரியம் செய்யக் கூடாது. மொட்டை போடக் கூடாது. மணியின் தந்தை தான் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும். அப்போது தான் என் ஆத்மா சாந்தியடையும். இந்தியாவில் பிரதமரும், தமிழகத்தில் முதல்வரும் இனிமேலாவது மதுக்கடைகளை அடைக்கிறார்களா? என பார்ப்போம். இல்லையென்றால் நான் ஆவியாக வந்து மதுக்கடைகளை அடைப்பேன்.” என எழுதப்பட்டிருந்தது.
தந்தைக்கு ஏற்பட்ட குடிப்பழக்கம் மகனுக்கு ஏற்படுத்திய அதிக பாதிப்பு, அந்த மாணவனை தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டியுள்ளது. இந்தச் சம்பவம் கிரமா மக்களிடம் அதிக சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற குடிகார தந்தைகள், தங்கள் எதிர்கால சந்ததியின் நலம் கருதி இனியாவது குடிக்காமல் இருக்க வேண்டும் என்ற வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து கேட்கப் பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், பூரண மதுவிலக்கு கொண்டு வருவதே தமிழக அரசின் நோக்கம் என்றும், டாஸ்மாக்கை படிப்படியாக மூட அரசு உறுதியாக உள்ளது என்றும் கூறினார்.
மேலும், குடிகாரர்களாக பார்த்து திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது; டாஸ்மாக்கை மூடக்கோரி இளைஞர் தற்கொலை செய்தது வருந்தத்தக்கது என்று அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.