மதுரை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் மதுரை சிறையில் உள்ள முருகன் மற்றும் கருப்பசாமியிடம் விசாரணை அதிகாரி சந்தானம் விசாரணையை தொடங்கினார். இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து நாளையும் விசாரணை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப் பட்டது. இவர்கள் இருவரிடமும் விசாரணை முடிந்ததும் அறிக்கை தயார் செய்யப் படும் என்று கூறப் படுகிறது.
விசாரணைக் குழு அதிகாரி சந்தானம் தனது விசாரணை அறிக்கையை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். வரும் 15ஆம் தேதிக்குள் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை ஆளுநர் மாளிகையில் சந்தானம் ஒப்படைக்கவுள்ளார்.
இந்நிலையில், நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிசிஐடி., போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டு வருகின்றனர். அவர்களைக் குழப்பும் வகையில், மேலும் பல படங்களும் வீடியோக்களையும் வாட்ஸ்அப் களில் உலவ விட்டு, வேறு யாரோ சதி செய்கிறார்கள் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், நிர்மலா தேவியும் தாம் அந்தப் பொருளில் மாணவிகளிடம் பேசவில்லை என்றும், தனது பேச்சை தவறாக சித்திரித்து வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் கூறி வருகிறார்.
இதனால் இத்தகைய செயல்பாடுகளுக்கு யார் காரணம் என்பது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.