சென்னை: டிசம்பர் 4ஆம் தேதியே ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதாக எப்படிச் சொன்னார் திவாகரன் என்பது குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கேட்ட கேள்விக்கு திவாகரன் பதிலளித்துள்ளார்.
சசிகலாவின் சகோதரர் திவாகரன் இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, 2016 டிசம்பர் 4ஆம் தேதியே ஜெயலலிதா உயிரிழந்து விட்டதாக முதலில் திவாகரன் கூறினார். இது குறித்து பின்னர் விளக்கம் அளித்த போது, மருத்துவ ரீதியாக மரணமடைந்து விட்டதைத்தான் அவ்வாறு கூறினேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரனிடம் விசாரிக்க முடிவு செய்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், அவரை இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. அதன்பேரில் திவாகரன் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் எதுவும் திவாகரனிடம் உள்ளதா என்பது குறித்தும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரம், டிசம்பர் 4ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் என்பது குறித்து திவாகரனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.




