நெல்லை: புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் செல்போன் எண் பெற்று, அவரை மிரட்டி தன் வீட்டுக்கு வரச் செய்து, தனிமையில் இருந்த போலீஸ் ஏட்டு குறித்து வீடியோ எடுத்து முகநூல் உள்ளிட்ட சமூகத் தளங்களில் பதிவிட்ட 5 பேர் மீது ஏழு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன். 40 வயதான இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர், பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணி புரிகிறார். இவர், பாவூர்சத்திரம் அருகே ராஜேஸ்வரி நகரில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார்.
இவர், காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பெண்களை ஆள் பார்த்து அவர்களிடம் செல்போன் எண் பெற்றுக் கொள்வாராம். அவர்களை பின்னர் தொடர்பு கொண்டு, வழக்கு விஷயமாகப் பேசுவதாகக் கூறி, கொஞ்சம் கடலை போட்டு, வழிக்குக் கொண்டு வருவாராம். பின்னர், தனது வீட்டுக்கு வரச் சொல்லி தனிமையில் இருப்பார் என்கிறார்கள்.
இவ்வாறு 50க்கும் மேற்பட்ட பெண்கள் அவரது வீட்டுக்கு வந்து செல்வதைக் கண்டு கொதிப்படைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், இவரைக் கையும் களவுமாகப் பிடிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி, ஒரு வழக்கில் புகார் அளிக்க வந்த கடையம், புலவனுாரைச் சேர்ந்த பாரதி (வயது 32) என்ற பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து தனிமையில் இருந்த போது, அவரது வீட்டு காலிங் பெல் அழுத்தி, நடராஜன் கதவைத் திறந்ததும் உள்ளே சென்று அவர்கள் இருந்த கோலத்தை செல்போனில் படம் பிடித்துள்ளனர் சிலர்.
நடராஜனையும் அந்தப் பெண்ணையும் ஆபாசமாகத் திட்டிய அவர்கள், அரைகுறை ஆடையுடன் அவர்கள் இருவரும் தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சியும் விடாமல் வீடியோ பதிவு செய்து, அந்தக் காட்சிகளை பேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் பரவ விட்டனர்.
இதை அடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற ஆய்வாளர் தனலட்சுமி, இருவரையும் மீட்டுச் சென்றார். விசாரணைக்குப் பின்னர் ஏட்டு நடராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதன் பின்னர் புலவனுார் பாரதி அளித்த புகாரின் பேரில், இருவரும் தனிமையில் இருந்த போது, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து தகராறு செய்து படம் பிடித்த, அன்பழகன், அருண், பரமசிவன், ஆறுமுகபாண்டி, செந்தில்குமார் ஆகியோர் மீது, பிரிவுகள் 294 பி அவமானமாக திட்டுதல், 342 பெண்ணை அறையில் அடைத்து வைத்தல், 447 வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், 354 பெண்ணை மானபங்க படுத்துதல், 506 (2) மிரட்டுதல், (ஆபாச வீடியோவை முகநூலில் பரப்பியதற்காக) தகவல் தொழில்நுட்பப் பிரிவு 67 உள்ளிட்ட 7 பிரிவுகளில் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.





