இன்றைய ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் இறந்ததாகப் பரப்பப் பட்ட தகவலில் உண்மையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
பாபநாசம் ஒன்றியத்தில் பணியாற்றியதாகக் கூறப்படும் பார்வையற்ற ஆசிரியர் தியாகராஜன் என்பவர் பாபநாசம் ஒன்றியத்திலேயோ அல்லது தஞ்சாவூர் மாவட்டத்திலேயே பணியாற்றவில்லை என தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
இன்று உயிரிழந்ததாகக் கூறப்படும் ஆசிரியர், திருத்துறைப்பூண்டி அருகே பாலக்குறிச்சியில் வசித்து வரும் மற்றொரு கண் பார்வையற்ற ஆசிரியர் தியாகராஜன் என்பவர். இவர் நன்னிலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று இரவு நெஞ்சுவலி காரணமாக தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த செய்தியை நன்னிலம் ஆசிரியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொள்ளப் பட்டது.
இந்தச் செய்தி, அங்கே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் மூலம், ஒருவர் மூலம் ஒருவர் என தவறான வகையில் சென்று சேர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் இறந்து விட்டார் என்றவாறு ஊடகத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆசிரியர் போராட்டத்திற்கே செல்லவில்லை.
இப்படி ஒரு தகவலை திருவாரூர் மாவட்டம் நன்னிலம் எஸ்.எஸ்.ஏ அலுவலகம் விளக்கமாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது.
எப்போதுமே பரபரப்புக்காக செய்தி பரப்பும் ஊடகங்களிடம் இது போன்ற தகவலை வேண்டுமென்றே பரப்பி விட்டது யார் என்பது மில்லியன் டாலர் கேள்வி ஒன்றும் அல்ல, இதில் சிதம்பர ரகசியமும் ஏதும் இருக்காதுதான்!