குமாரசாமி பதவியேற்பு விழாவில் தமிழகத்திலிருந்து எந்த அரசியல்வாதியும் பங்கேற்கக் கூடாது என்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கைப் பதிவில்… காவிரி நதிநீர் பங்கீடு குறித்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, “மேலாண்மை ஆணையம்” அமைக்கப் பட்டு விட்டது. ஆணையத்தை எந்தளவிற்கு கர்நாடகம் மதிக்கப் போகிறது என்று காலப்போக்கில் தான் தெரியும். குமாரசாமியின் தந்தை தேவகவுடா பிரதமராக இருந்தபோது, ஒரு சொட்டு கூட காவிரி நீர் தமிழகத்திற்கு வழங்கவில்லை. இப்பொழுது இவர்கள் கையில் கர்நாடக மாநில ஆட்சியும் சிக்கியுள்ளது.
ஆணையம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தியகாரணத்திற்காக பிரதமர் மோடி வருகையின்போது சில அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர். தமிழக இளைஞர்கள் மத்தியில் காவிரிப் போராட்டம் நீர்த்துப் போய்விடக்கூடாது என்பதற்காக IPL போட்டி தடுத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் குமாரசாமி பதவி ஏற்பு விழாவிற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆணையம் அமைப்பதற்கு காலம் தாழ்த்தியதற்கே தமிழகம் பல போராட்டங்களை நடத்தியது.
இன்னும் காவிரி ஆணையமும் அமலுக்கு வரவில்லை; காவிரி நீரும் வரவில்லை. இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசியல்வாதிகள் எவரேனும் கர்நாடகத்திற்கு சென்றால் தமிழக இளைஞர்களின் உணர்வுகள் அப்படியே மழுங்கிப்போய்விடும். எனவே தமிழக இளைஞர்களின் போராட்டம் மழுங்கடிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால், ஸ்டாலினோ வேறு எந்த அரசியல்வாதியோ குமாரசாமி பதவி ஏற்பு விழாவிற்கு பெங்களூர் போகக்கூடாது என புதிய தமிழகம் எச்சரிக்கிறது… என்று குறிப்பிட்டுள்ளார்.


