நம்மாழ்வார் சாற்றுமுறை ‘மோதல்’ விவகாரம்: காஞ்சி வரதர் கோயில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

Kanchi varadarajaperumal temple uthsav - 2026

சென்னை: காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் பிரம்மோத்ஸவம் நடைபெற்ற போது, நம்மாழ்வார் சாத்துமுறை நாளில் இரு கலை பிரிவினருக்கு இடையே திடீரென தகராறு வெடித்தது. அதற்கு, காஞ்சி கோயில் செயல் அலுவலரின் தூண்டுதலில், கோயில் மணியக்காரரின் செயல்பாடு இருந்ததாக புகார் எழுந்தது.

நம்மாழ்வார் சாத்துமுறை விவகாரம் தமிழ் – சம்ஸ்கிருந்த வேதங்களைச் சொல்வதற்கு இடையிலான பிரச்னையாக ஒரு புறம் கிளம்ப, இன்னொரு புறம் சாதி ரீதியான பிரச்னையாக சிலர் தூண்டிவிட்டனர். இந்நிலையில் பிரம்மோத்ஸவம் முடியும் காலம் வரை, காஞ்சியில் பரபரப்பு நிலவியதால் காவலர்கள் அதிக அளவில் பாதுகாப்புக்கு நிறுத்தப் பட்டனர்.

இந்நிலையில், ஒரு தரப்பினர் அறநிலையத்துறை ஆணையர் மற்றும் உயரதிகாரிகளுக்கு நடந்த விவகாரத்தை புகாராக அனுப்பினர். இந்நிலையில், சம்பவத்தன்று பிரச்னை ஏற்படாமல் தடுக்காத வகையிலும், பின்னணியில் இருந்து ஒரு தரப்புக்கு சாதகமாக இருப்பது போல் காட்டி, கோயில் நடைமுறையில் குழப்பத்தை விளைவித்ததாகவும் கோயில் செயல் அலுவலர் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது, நம்மாழ்வார் சாற்றுமுறை பாதியில் நிறுத்தப் பட்டது பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அடுத்த நாளிலும் அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்ய வாய்ப்பு இருந்த போதும், மெத்தனமாக செயல்பட்டு செயல் அலுவலர் பிரச்னையை மேலும் பெரிதாக்கியதால் பக்தர்கள் பலர் கொதித்துப் போயினர்

இதனிடையே காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் செயல் அலுவலர் விஜயன் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். அறநிலையத்துறை கூடுதல் இயக்குனர், இணை ஆணையர், வருவாய்க் கோட்ட அலுவலர், தாசில்தார் ஆகியோர் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் காஞ்சி கோயில் செயல் அலுவலர் விஜயன் விடுப்பில் சென்றார். அவருக்கு பதிலாக குமரக் கோட்டம் செயல் அலுவலர் தியாகராஜன், காஞ்சி கோயிலின் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.

இது குறித்து இணை ஆணையர் அசோக் குமார் கூறியபோது, வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்த பிரச்னை தொடர்பாக விஜயன் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.