திருப்பூர்: திருப்பூரில் தனது தந்தை, தன் அம்மாவை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதை ஏற்றுக் கொள்ள இயலாத மகன், அந்தப் பெண்ணை கொலை செய்ய முயற்சித்து அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
திருப்பூர் கல்லூரிச் சாலையை சேர்ந்தவர் துரை. இவர் மனைவி ரத்தினம் மற்றும் மகன் அருணுடன் வசித்து வந்தார். ஆனால் கடந்த ஒரு வருடமாக மனைவி ரத்தினத்தைப் பிரிந்து அதே பகுதியைச் சேர்ந்த ரங்கநாயகி என்ற பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார் துரை.
இது குறித்து அருண் மற்றும் ரத்தினம் பலமுறை காவல் துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இந்நிலையில், இன்று துரை, ரங்கநாயகி இருவரும் டவுன்ஹால் அருகே பேருந்துக்காகக் காத்திருந்த போது துரையின் மகன் அருண் கையில் வைத்திருந்த அரிவாளால் ரங்கநாயகியை வெட்ட முயற்சி செய்துள்ளார் .
உடனடியாக சுதாகரித்துக் கொண்ட ரங்கநாயகி அரிவாளைத் தன் கையால் தடுக்க முயற்சித்த போது கையில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அருணைப் பிடித்து அருகில் இருந்த வடக்கு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
காயமடைந்த ரங்கநாயகியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திடீரென நிகழ்ந்த இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.




