திருப்பதி தேவஸ்தான மண்டபத்தை முற்றுகையிட்ட தி.வேல்முருகன் உள்ளிட்டோர் கைது

கடலூர்: நெய்வேலியில் திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபத்தை முற்றுகையிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட 300 பேரை போலீஸார் கைது செய்தனர். ஆந்திராவில் ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். இதில் தமிழகத் தொழிலாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலையைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உருவ பொம்மையை எரித்து முழக்கமிட்டனர். அடுத்து, திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபத்தை முற்றுகையிட்டனர். இதனால், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட 300 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கரூர், தருமபுரியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூரில் ஆந்திரப் பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தப் பட்டது.