அதுவாக இடிந்து சேதம் விளைவிக்கும் முன்னே நாமாக இடித்துவிடலாம் என்ற எண்ணத்தில், தமிழகம் முழுவதும் வலுவிழந்த பழைய பாலங்களை இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நூறாண்டுகளைக் கடந்த பாலங்கள் குறித்து ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
காவிரி ஆற்றில் பாய்ந்தோடி வந்த வெள்ள நீரின் அழுத்தம் தாங்காமல், திருச்சி முக்கொம்பு கதவணையில் 9 மதகுகள் அடித்துச் செல்லப்பட்டன. அந்தப் பாலமும் துண்டிக்கப்பட்டது. இதை அடுத்து அங்கு சென்று ஆய்வு நடத்திய பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் பிரபாகர், 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பாலங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் வலுவிழந்த பாலங்கள் இடித்து அகற்றப்படும் என்று அறிவித்தார்.
தொடர்ந்து, வலுவிழந்த பாலங்கள் குறித்தும் பாலங்களின் தன்மை குறித்தும் முதலமைச்சரிடம் அறிக்கை அளிக்கப்படும் என்று அவர் கூறினார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பாலங்கள், கதவணைகளை ஆகியவற்றை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
கொள்ளிடம் பாலம் வலுவிழந்து, திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த பழைய பாலம் தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் உடைந்தது.
இப்போது, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 8 பாலங்கள் வலுவிழந்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அவற்றை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கரை கீழணையும் ஆய்வு செய்யப்படவுள்ளது.




