திருநெல்வேலி மாவட்டத்தில் குடிநீர் தொட்டிகளை சரியாக பராமரிக்காமல் பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் வழங்கிய ஊராட்சி செயலர் மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவரை தற்காலிக பணிநீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
பொதுமக்களுக்கு விநியோகிக்கும் குடிநீர் சுகாதாரமாகவும், தரமாகவும் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாங்குநேரி ஒன்றியம் அரியகுளம் ஊராட்சியில் கடந்த சில தினங்களாக சேதமுற்ற மேற்கூரை உடைந்து திறந்த வெளியில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி வாயிலாக சுகாதார மற்ற முறையில் குடிநீர் வழங்கியுள்ளார்கள்.
மேற்கூரை பழுது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தராமலும் உள்ளதை அறிந்து அரியகுளம் ஊராட்சி செயலர் பொறுப்பு வகிக்கும் பாலகிருஷ்னன் மற்றும் நீர் தேக்க தொட்டி இயக்குபவர் மாடசாமி ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப் பட்டுள்ளது.




