பெரம்பலூர்: பெரம்பலூரில் மயூரி பியூட்டி பார்லர் என்னும் பெயரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார் சத்தியா என்ற பெண். இவர், வேப்பந்தட்டை திமுக., முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் தற்போதைய பொதுக் குழு உறுப்பினருமான செல்வக்குமார் என்பவரிடம் இருந்த பழக்கத்தின் காரணமாக, பியூட்டி பார்லர் வைக்க லட்சங்களில் பணம் பெற்றுள்ளார்.
தொடர்ந்து, அவரிடம் பணம் பெற்று, மேலும் வேறு இடங்களிலும் பியூட்டி பார்லர் திறந்து வந்துள்ளார். இதனிடையே செல்வக்குமார் தான் கொடுத்த பணத்தைக் கேட்டு சத்யாவிடம் தகராறு செய்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி அன்று குடிபோதையில் பியூட்டி பார்லருக்குள் புகுந்த செல்வக்குமார், பணம் கேட்டு சத்தியாவை அடித்து உதைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சத்தியா தரப்பினர், இது தொடர்பாக பெரம்பலூர் நகர காவல் துறையிடம் புகார் அளித்தனர்.
ஆனால், காவல்துறையினர் இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், செல்வக் குமார் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அடித்து உதைத்து வன்முறையில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகளை சத்தியா தரப்பினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
இதை அடுத்து இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவின. இந்நிலையில் தகவல் அறிந்த காவல்துறையினர் செல்வக்குமாரை கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
இதனிடையே, செல்வக்குமாரை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்துள்ளது திமுக. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, மேற்கு ஒன்றியம் அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் உறுப்பினர் எஸ்.செல்வகுமார், கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப் படுகிறார் என்று திமுக., பொதுச் செயலர் க.அன்பழகன் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது.
கைதானவர் திமுக பிரமுகர் என்பதால் கட்சிகள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுக.,வினர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு சிசிடிவீ கேமராக்களில் மாட்டிக் கொண்டு சமூக வலைத்தளங்களில் கேவலப் படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அது குறித்த காணொளிப் பதிவு….





