ஒகேனக்கல் வனப்பகுதியில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாக்கெட் வாட்டர் பிளாஸ்டிக் கழிவுகளால் வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுற்றுச் சூழல் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் காவிரி நீர்வீழ்ச்சிக்கு தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, சென்னை, மதுரை, என தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கேரளா, கர்நாடக, பாண்டிச்சேரி போன்ற பல அண்டை மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதியால் சூழப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் செல்வதற்கு பென்னாகரத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் செக்போஸ்ட் உள்ளது . அங்கிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடர்ந்த வனப் பகுதியாகும். இந்த வனப்பகுதி முழுவதும் தருமபுரி மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இரவு நேரங்களில் வனவிலங்குகள் அதிக நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் சுற்றுலா வரும் பயணிகளால் வன விலங்குகளின் உயிருக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாமல் இருக்க வனத்துறையின் சார்பில் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு வழி நெடுகிலும் சிமெண்ட்டால் ஆன பாதுகாப்பு விழிப்புணர்வு போர்டுகள், இரும்பு தகடுகளால் ஆன வன விலங்குகள் பதித்த போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
அப்படி இருந்தாலும் பிளாஸ்டிக் கழிவுகளால் வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் சுற்றுலா வரும் பயணிகள் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி அவர்கள் கொண்டு வரும் உணவு வகைகளை சாப்பிட்டு விட்டு பிளாஸ்டிக் கழிவுகளை வனப்பகுதியிலேயே போட்டுவிட்டு செல்கின்றனர்.
மேலும் சுற்றுலா வரும் மதுபான பிரியர்கள் மது குடித்துவிட்டு காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட் ஆகிய கழிவுகளை போட்டுவிட்டு செல்கின்றனர்.
இது போதாதென்று, கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய பொதுமக்கள் விநாயகர் சிலையை காவிரியில் கரைப்பதற்கு வந்து சென்ற போது, அவர்களும் தங்கள் பங்குக்கு சாலையின் இரு புறமும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட் கழிவுகளை வீசி சென்றுள்ளதாகத் தெரிகிறது.
இந்த பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்களால் வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் வனத்துறையினர் கழிவுகளை அப்புறப்படுத்தி, வனப்பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ளாமலும், மது குடித்து விட்டு பாட்டில்களை வீசிச் செல்லும் சமுக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்கோடு இருக்கின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், நல்லெண்ணம் கொண்ட சுற்றுலா பயணிகள் சிலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.




