சென்னை: திமுக., தலைவர் மு.க. ஸ்டாலின் வழியில் அரசியல் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். பிரியாணி கடையில் திமுக.,வினர் ஓசி பிரியாணி கேட்டு கடைக்காரர்களை கும்மாங்குத்து குத்திய வீடியோக்கள் வைரலானதும், பிரியாணிக் கடைக்கே ஓடோடிச் சென்று அடிபட்ட கடைக்காரரை சந்தித்து ஆறுதல் கூறினார் ஸ்டாலின்.
இப்போது தமிழக பாஜக., தலைவர் தமிழிசையின் முறை. பாஜக., நபரால் தள்ளிக் கொண்டு ஓரங்கட்டப் பட்ட ஆட்டோ டிரைவரை வீடு தேடிச் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார் தமிழிசை.
சென்னையில் ஜாபர்கான்பேட்டை அருகே விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான தெருகூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக.,வின் மாநில தலைவர் தமிழிசை கலந்து கொண்டார். அப்போது ஊடகத்தினர் தமிழிசையிடம் கேள்வி எழுப்பினர். அந்நேரம், தமிழிசையின் பின்புறம் நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் கதிர் என்பவர், ஆர்வக் கோளாறில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு புன்முறுவல் செய்து சூழலைத் தவிர்த்தார் தமிழிசை. ஆனால் அதே நேரம் அருகே நின்றிருந்த பாஜக., பிரமுகர், கதிரைப் பிடித்து நெம்பித் தள்ளி அங்கிருந்து அப்புறப் படுத்தினார். இது சமூக வலைத் தளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை ஆட்டோ டிரைவரின் வீட்டுக்குச் சென்ற தமிழிசை அவரை சந்தித்து ஆறுதல் கூறினார். கையில் ஸ்வீட் பாக்ஸுடன் சென்ற தமிழிசை, தனது பக்கத்தில் கதிரை உட்காருமாறு கூறினார். குடும்பத்தினருக்கு இனிப்பு வழங்கினார். மேலும் கதிர் கேட்ட கேள்வியில் தவறில்லை என்றும் கூறினார்.
தெருக்கூத்து நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநர் சகோதரர் கதிர் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவருடன் உரையாடியபோது. pic.twitter.com/PfLd8j3KiT
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) September 18, 2018
ஆட்டோ டிரைவரைப் பிடித்து தள்ளிக் கொண்டு போன (இடதுபுறத்தில் அமர்ந்திருப்பர்) நபர் தமிழிசையிடம் கதிரை அறிமுகப்படுத்தி இவர் நமது கட்சி பிரசாரத்துக்கு ஆட்டோ ஓட்டினார் என்றார்.
இந்த சந்திப்பு தொடர்பான வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தமிழிசை!
தெருக்கூத்து நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநர் சகோதரர் கதிர் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவருடன் உரையாடியபோது. pic.twitter.com/CyBge0KUWu
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) September 18, 2018




