எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2015-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மே 1-ஆம் தேதியன்று பன்னிரண்டரை வயது பூர்த்தியடைந்த தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மையங்களில் தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை ஏப்ரல் 15 முதல் 21-ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். தேர்வுக் கட்டணம் ரூ.125, பதிவுக் கட்டணமாக கூடுதலாக ரூ.50 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை பணமாகச் செலுத்த வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி எதுவும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ஆம் வகுப்பிற்குக் கீழ் படித்து இடையில் நின்றவர்களும் தனித் தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். ஆனால், பன்னிரண்டரை வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். இணையதள விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் ஏதேனும் ஒரு நகலை இணைக்க வேண்டும். இதற்கு தத்தகல் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வழங்கப்படாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.