கோவை அருகே வன எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் நாள்தோறும் தொடரும் யானைத் தொல்லையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கோவை அடுத்த மாங்கரை,பெரியதடாகம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமங்களில் நாள்தோறும் காட்டு யானைகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.
நள்ளிரவில் ஊருக்குள் யானைகள் வந்த நிலை மாறி மாலை நேரங்களிலேயே ஊருக்குள் காட்டு யானைகள் புகுவது தொடர்கிறது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 7.30 மணி அளவில் கணுவாய் அடுத்த சோமையனூர் பழனியப்பா லே அவுட் பகுதியில் ஒரு குட்டி யானை மற்றும் அதன் யானையானையிடன் புகுந்தது.
ஒவ்வொரு வீதியாக வலம் வந்த யானைகள் சங்கர் என்பவரது வீட்டின் முன்புறம் இருந்த பப்பாளி மரத்தை முறித்து சப்பிட்டது.இதனால் வீட்டில் இருந்தவர்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த வேட்டை தடுப்பு காவலர்கள்,வனத்துறையினர் யானைகளை பட்டாசு வெடித்து விரட்டினர்.இதனையடுத்து அங்கிருந்து சென்ற யானைகள் அருகில் இருந்த செங்கல் சூளைக்குள் புகுந்து அங்கிருந்த பன மரக்கூழை சாப்பிட்டது.அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் பட்டாசு வெடித்து விரட்டினர்.
நாள்தோறும் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.மேலும் யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரித்துள்ளனர்.




