எழுத்தாளார் ஜெயகாந்தன் மறைவுக்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில்….
தலைசிறந்த தமிழ் எழுத்தாளரான ஜெயகாந்தன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
தமிழ் இலக்கிய வரலாற்றை எழுத வேண்டுமானால் ஜெயகாந்தனை தவிர்த்துவிட்டு எழுத முடியாது. 145 சிறுகதைகளையும், 41 புதினங்களையும் எழுதியவர். நான்கு தலைப்புகளில் தமது வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்தவர். இவரது படைப்புகள் ஒவ்வொன்றிலும் வாழ்க்கைக்குத் தேவையான ஏதேனும் ஒரு பாடம் நிச்சயமாக இருக்கும்.
ஞானபீட விருதையும், சாகித்ய அகாடமி விருதையும் பெற்றவர். பொதுவுடமைக் கொள்கைகளில் நம்பிக்கைக் கொண்டவர் என்ற போதிலும், காமராஜரின் அன்புக்கு பாத்திரமாகி அக்கட்சிக்காக உழைத்தவர்.
புகழின் உச்சங்களைத் தொட்டவர் என்ற போதிலும் எளிமையானவர்; யதார்த்தமானவர். எந்தக் காலத்திலும் தமது சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதவர். இவரது மறைவு இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
எழுத்தாளர் ஜெயகாந்தனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இலக்கிய உலகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.