பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு; அந்தமானில் இருந்து தென்னங்கன்றுகள்: நிர்மலா சீதாராமன் உறுதி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி

nirmala - 2026

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நிவாரணப் பொருள்களை வழங்கினார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து மத்திய ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

அப்போது மக்களிடையே பேசிய நிர்மலா சீதாராமன், புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்துள்ளேன். இதற்கு முன் மத்தியக் குழு விரைவாக பார்வையிட்டுள்ளது. அவர்களும் அறிக்கை தயார் செய்து வருகின்றனர். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் விரைவாகக் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக பொருளாதார கணக்கெடுப்புப் பட்டியலில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் பெயர் இருந்தாலும் உடனடியாக வீடு கட்ட அனுமதி அளிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும்.  பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பயனாளி பட்டியலில் பெயர் இருந்தால் உடனடியாக வீடு கட்ட அனுமதி அளிக்க ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயிர் காப்பீட்டுத் தொகை விஷயத்தில், விவசாயிகள் செலுத்த வேண்டிய தொகையை, தமிழக அரசு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிவாரணத் தொகையில் காப்பீட்டு தொகையில் பிடித்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்னை விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படும். புயலால் சேதமடைந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்த விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும்.

புதிய தென்னைமரக் கன்றுகளை மத்திய அரசு ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா மாநிலத்திலுருந்து கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும். மேலும் அந்தமானிலிருந்து தென்னை கன்றுகளை ராணுவக் கப்பல் மூலம் தூத்துக்குடி கொண்டு வந்து விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும். தேவையான உதவிகளை மத்திய அரசு கண்டிப்பாக வழங்கும் எனக் கூறினார் நிர்மலா சீதாராமன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.