தமிழகத்தில் தாமரை! கூட்டணி யாருடன்? நிர்வாகிகளிடம் விளக்கிய மோடி!

உள்ளூர் செய்திகள் கோவை தமிழகம்
modi - 2026

தமிழகத்தில் பாஜக., மலர்வது உறுதி. கூட்டணி யாருடன்? என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து தமிழக பாஜக., நிர்வாகிகளுடன் பேசியபோது மோடி சிலவற்றைக் குறிப்பிட்டார்.

தர்மபுரி, கடலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, அரக்கோணம் தொகுதி பாஜக,, நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார்.

தமிழக மக்களுக்கு தனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட மோடி, தமிழகத்தில் யாருடன், பாஜக., கூட்டணி அமைக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்தார்.

தமிழகத்தில் கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன. பழைய நண்பர்களுக்கும், கட்சிகளுக்கும் பாஜக.,வின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். கூட்டணி விவகாரத்தில் வாஜ்பாயின் வழியிலேயே பாஜக., செயல்படும்.

அரசியல் பிரச்னைகள் எத்தனை இருந்தாலும் வெற்றி பெறுவது மக்களுடனான கூட்டணிதான். மத்தியில் பாஜக., பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றாலும், கூட்டணியுடனே பாஜக., ஆட்சி அமையும்.

நம்பிக்கையின் அடிப்படையிலேயே கூட்டணி அமையும். கட்டாயத்தின் அடிப்படையில் இல்லை. பழைய நண்பர்களை வரவேற்க பாஜக., தயாராக உள்ளது என்று கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்து அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார்.

தொடர்ந்து, பாஜக., தொண்டர்களிடமும், மக்களிடமும் பாஜக.,வின் கொள்கைகள், திட்டங்கள், செயல்பாடுகள், கனவுகள் ஆகியவற்றைக் கொண்டு செல்ல நிர்வாகிகள் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும் என்றார்.

பொருளாதார நிர்வாகத் திறன் இல்லாமை, ஊழல் இவைதான் காங்கிரஸ் அரசின் மிகப்பெரிய தோல்விக்கு காரணம் என அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் அதுமட்டும் காரணம் இல்லை, சொந்த படையையே காங்கிரஸ், சேதப்படுத்தி உள்ளது. பல ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையை புரோக்கர்களின் கூடாரமாக காங்கிரஸ் மாற்றி வைத்திருந்தது.

பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் கூட்டம் எப்போது நடக்கும் என்பதை கூட இடைத் தரகரான மிக்கேல் தெரிந்து வைத்துள்ளார். அரசு ஆவணம் தொடர்பான விவரங்களைக் கூட தெரிந்து வைத்துள்ளார் என்றால், ரபேல் ஒப்பந்தத்தை 10 ஆண்டுகள் தாமதப்படுத்தி உள்ளார் என்றால்… நாட்டின் பாதுகாப்பை ஆபத்தாக்கும் எத்தகைய பங்களிப்பு அவருக்கு இருந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அந்த இடைத்தரகர் சோனியா குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றார்.

ரபேல் விவகாரம் மட்டுமின்றி, ஊழல்களில் காங்கிரஸின் பங்கினை எடுத்துச் சொல்லி, மக்களிடம் நேர்மையையும், நிர்வாகத்தில் ஒளிவுமறைவற்ற தற்போதைய அரசின் செயல்பாடுகளையும் கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.