காதலன் கொலை; கள்ளக்காதலில் அக்கா கணவருடன் கைகோத்த கல்லூரி மாணவி கைது!

சென்னை: காதலனைக் கொலை செய்ய கள்ளக் காதலில் ஈடுபட்ட அக்காள் கணவருடன் கைகோத்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். கொலையில் தொடர்புடைய சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூரை அடுத்த அமரம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன்(19) கடந்த 3 ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து சோமங்கலம் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், கமலக்கண்ணன் கொலை செய்யப்படுவதற்கு முன் நண்பர்களுடன் பேசியுள்ளார். அப்போது, ‘காதலி ரேணுகா என்னை அழைத்துள்ளார், அவளைப் பார்க்கச் செல்கிறேன்’ என்று கூறி இருக்கிறார். போலீசார், கமலக் கண்ணன் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அடிக்கடி ரேணுகா தேவிக்கு பேசியது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் ரேணுகாதேவியைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரேணுகா தேவி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கொலைக்கான காரணத்தை தெரிவித்தார். அவர் அளித்த வாக்குமூலம்: ”நான் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2 ஆம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு தாய், தந்தை இல்லை. உறவினர் வீட்டிலேயே தங்கிப் படித்து வருகிறேன். நானும், கமலக்கண்ணனும் பள்ளிப் படிப்பை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அனாதை விடுதியில் தங்கி படித்தோம். அப்போது எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் தனிமையில் சந்தித்துப் பேசி வந்தோம். இது விடுதியில் தெரிந்ததால், உடனே எங்களை விடுதியில் இருந்து நீக்கி விட்டனர். அதன்பின் சொந்த ஊருக்கு வந்தோம். இருவரும், அவரவர் உறவினர் வீட்டில் தங்கினோம். நேரில் சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும் கமலக்கண்ணனுடன் செல்போனில் பேசிவந்தோம். அப்போது திருமணமான எனது பெரியம்மா மகளின் கணவர் மணிகண்டனுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அதுவே எங்களுக்குள் காதலாக மாறியது. நாங்கள், குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்தோம். ஆனால், கமலக்கண்ணன் எனது செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசினார். ஒரு கட்டத்தில் நேரில் பார்க்க வேண்டும் என்று என்னிடம் தொந்தரவு செய்தார். அதனால், எனக்கும் கமலக்கண்ணனுக்கும் இடையே இருந்த காதல் விவகாரத்தைக் கூறி, கலக்கண்ணன் என்னை தொந்தரவு செய்வதாக மணிகண்டனிடம் சொன்னேன். அதனால்அவர், நம் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கமலக்கண்ணனை தீர்த்துக் கட்டிவிடுவோம் என்று கூறினார். நானும் சரி என்றேன். எனவே கமலக்கண்ணனை செல்போனில் பேசி அமரம்பேடு ஏரிக்கரைக்கு வருமாறு கூறினேன். அவரும் வருவதாகச் சொன்னார். ஆனால் நான் ஏரிக்கரைக்குச் செல்லவில்லை. இதை, மணிகண்டனிடம் நான் கூறியதும் உடனே அவர் தனது கூட்டாளிகளுடன் அங்கே சென்று மறைவிடத்தில் காத்திருந்திருக்கிறார். அந்த நேரம், கமலக்கண்ணன் ஏரிக்கரைக்கு வந்து என்னைத் தேடி இருக்கிறார். அப்போது, அவரை மணிகண்டனும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து வெட்டிக் கொலை செய்திருக்கின்றனர். அவரை கொலை செய்த விவரத்தை மணிகண்டன் என்னிடம் கூறினார்.” என்று கூறியுள்ளார் இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகள் தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.