காதலை எதிர்த்து அரிவாள் வெட்டு: மருத்துவமனையில் தாலி கட்டிய காதலன்

திருவாரூர்: காதலை எதிர்த்து உறவினர்களே மணப்பெண்ணை வெட்டினர். மருத்துவமனையில் குற்றுயிரும் குலையுயிருமாக அனுமதிக்கப்பட்டிருந்த காதலிக்கு, காதலன் தாலியைக் கட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள அரித்துவாரமங்கலம் வ.உ.சி. நகரைச் சேர்ந்தவ வரதராஜன் மகள் கலைச்செல்வி (25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் இளையராஜா(31) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 2 வருடமாக அவர்கள் காதலித்து வந்த நிலையில், கலைச்செல்வியின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவருக்கு கொரடாச்சேரியில் மாப்பிள்ளை பார்த்தால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி இதைத் தன் காதலனிடம் தெரிவித்தார். பின்னர் அவர்கள் இருவரும் எடுத்த முடிவின் படி, கலைச்செல்வி தன் காதலனுடன் சென்று அவரது வீட்டில் தங்கினார். இது குறித்து ஊர்ப் பஞ்சாயத்தில் முறையிடப்பட அவர்கள் இருவருக்கும் (இன்று) திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். திருமணத்துக்கு தேவையான தாலி மற்றும் பொருட்கள் வாங்க நேற்று இரவு இளையராஜா அம்மாப்பேட்டை வந்தார். வீட்டில் கலைச்செல்வி மற்றும் இளையராஜாவின் வயதான தாய் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது கலைச்செல்வியின் சித்தப்பாக்கள் கலியபெருமாள், ரகுபதி, இவரது மகன் ஆனந்த் என்கிற ரகுவரன், கலைச்செல்வியின் தம்பி மணிகண்டன் ஆகியோர் அங்கு வந்து, அரிவாளால் கலைச்செல்வியை வெட்டினர். உருட்டு கட்டையால் தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இது குறித்து அரித்துவாரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துகு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த கலைச்செல்வியை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதை அடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ரகுபதியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற மூவரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், கலைச்செல்வி சிகிச்சை பெற்று வந்த தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த காதலன் இளையராஜா , அவர் காதலி அருகே இருந்து கவனித்து வந்ததுடன், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த இதே நாளில் கலைச்செல்வி கழுத்தில் தாலி கட்டினார்.