மதச் சடங்குகளில் தலையிடுவதில், நீதிமன்றங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 11ஆவது ஜீயராக இருந்த ரங்க ராமானுஜ தேசிகர், கடந்த மார்ச் 19ஆம் தேதியன்று விதேக முக்தியடைந்தார். அதன் பின்னர், அந்த ஆசிரமத்தின் 12ஆவது ஜீயராக, ஸ்ரீ யமுனாச்சாரியார் தேர்வு செய்யப்பட்டார்.
அவரது நியமனத்தை அறிவிக்கும் வகையில் அக்டோபர் 21 ஞாயிறு அன்று பட்டாபிஷேகம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அவரது நியமனத்தை எதிர்த்து சென்னை ஆசிரமத்தைச் சேர்ந்த சீடர் வெங்கடவரதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. “2015ஆம் ஆண்டு பதினொன்றாவது ஜீயர் ரங்க ராமானுஜ தேசிகர் எழுதி வைத்த உயிலின்படி, தனக்குப் பிறகு ஜீயராக நியமிக்க மூன்று பேரைப் பரிந்துரை செய்திருந்தார். அதில் ஒருவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். மீதமுள்ள அந்த இருவரையும் ஜீயராக நியமிக்காமல், மூன்றாவது நபரை அவசர அவசரமாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
உயிலில் கூறப்பட்டபடி நியமனம் நடைபெற வில்லை எனவும், மரபு மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இந்த ஆசிரமம் மத அமைப்பு என்பதால், இது தொடர்பில் பொது நல வழக்காக தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப் பட்டது.
ஆனால், இந்த விவகாரத்தில் பொதுநல வழக்கு என்ற வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். “இந்த மடம் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கானது என்பதால் பொது நல வழக்கு தொடர முடியாது. சிவில் வழக்குதான் தொடர முடியும்” என்று தெரிவித்தனர்.
மேலும், மதச் சடங்குகளில் தலையிடுவதில் மதச்சார்பற்ற நீதிமன்றங்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
புதிய மடாதிபதி பொறுப்பேற்க தடைவிதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு இரு வார காலத்துக்குள் பதிலளிக்குமாறு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம், இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்டோர்க்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
இதனால், நாளை புதிய ஜீயரின் பட்டாபிஷேகம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.




