20 பேர் கொலை: ஆந்திர காவலர்களிடம் பா.ம.க. உண்மை கண்டறியும் குழு விசாரணை

06-04-15 pmk Ramadhas photo 01சென்னை: 20 பேர் படுகொலை தொடர்பாக ஆந்திர காவலர்களிடம் பாமக அமைத்துள்ள குழு உண்மை கண்டறியும் விசாரணை மேற்கொண்டதாக பாமக தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் அப்பாவித் தமிழர்கள் 20 பேர் ஆந்திரக் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக பா.ம.க. சார்பில் உண்மை அறியும் குழுவை அமைத்திருந்தேன். பா.ம.க. வழக்கறிஞர் அணித்தலைவர் க.பாலு தலைமையிலான இக்குழு இன்று ஆந்திரா சென்று முதற்கட்ட விசாரணை மேற்கொண்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் உண்மைக் கண்டறியும் குழுவில், இப்படுகொலைகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சிவில் உரிமைகள் குழுவின் உறுப்பினர் சந்திரசேகர், ஆந்திர வழக்கறிஞர் திருமலை ரெட்டி, பசுமைத் தாயகம் அமைப்பின் செயலாளர் இர.அருள், தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சரவணன், கஜேந்திரன், குமார், கணல் கதிரவன், பாலாஜி, ஜானகிராமன், சக்கரவர்த்தி உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். பா.ம.க. குழுவினர் இன்று காலை திருப்பதியில் ஆந்திரக் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரில் 18 பேரின் குடும்பத்தினரை சந்தித்து விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு சந்திரகிரி காவல் நிலையத்திற்கு பா.ம.க. குழு சென்றது. அவர்களுடன் பா.ம.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிரொலி மணியன், கீ.லோ. இளவழகன் ஆகியோரும் சென்றிருந்தனர். அங்கு பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கொல்லப்பட்ட சசிக்குமாரின் மனைவி முனியம்மாள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. ‘‘ செம்மரக் கடத்தலுடன் எந்த வகையிலும் சம்பந்தப்படாத எனது கணவர் சசிக்குமாரை ஆந்திரக் காவல்துறையினர் கடத்திச் சென்று படுகொலை செய்து விட்டனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’’ என்று மனுவில் முனியம்மாள் கூறியிருந்தார். ஆனால், இதுகுறித்து ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னொரு புகார் தேவையில்லை என்று ஆந்திரக் காவல்துறை அதிகாரிகள் கூறினார்கள்.பா.ம.க.வின் உண்மை கண்டறியும் குழு அதை ஏற்க மறுத்ததுடன், ‘‘இந்த படுகொலைகள் குறித்து ஆந்திர வனத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. படுகொலைகளுக்கு மூலகாரணமே அவர்கள் தான் எனும்போது அதனடிப்படையில் நடத்தப்படும் விசாரணை நியாயமாக இருக்காது. எனவே, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் புகார் மனுவைப் பெற்று வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தினர். இதையடுத்து முனியம்ம்மாளின் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் அதற்கான ரசீதை கொடுத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்வதாக வாக்குறுதி அளித்தனர். அதன்பின்னர், சம்பவ இடத்தை பார்வையிடுவதற்காக செல்ல முயன்ற போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் அங்கு செல்லக் கூடாது என்றும் தடுத்தனர். அதையேற்று சம்பவ இடத்திற்கு செல்லும் திட்டத்தை பா.ம.க. உண்மையறியும் குழு தற்காலிகமாக ஒத்தி வைத்தது. தொடர்ந்து திருப்பதி நகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கோபிநாத் ஜாட்டி, திருப்பதி மேற்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசலு, திருப்பதி கிழக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவிஷங்கர் ரெட்டி , சந்திரகிரி காவல் நிலைய அதிகாரி சிவப்பிரசாத் ஆகியோரிடமும், மாவட்ட வனத்துறை அதிகாரி சீனிவாசனிடமும் பா.ம.க. குழு விசாரணை நடத்தியது. கொல்லப்பட்டவர்களின் இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை அவர்களின் குடும்பத்தினருக்கு பா.ம.க. குழுவினர் பெற்றுத் தந்தனர். கொல்லப்பட்டோரின் உடல்களை மறு உடற்கூறு ஆய்வு செய்ய ஆணையிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்காக சென்னை திரும்பும் உண்மை கண்டறியும் குழு, மீண்டும் ஆந்திரா சென்று விசாரணையைத் தொடரும். மேலும் பல அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி, ஆவணங்களைப் பெற்று ஆய்வு செய்த பிறகு விசாரணை அறிக்கையை பா.ம.க. தலைமையிடம் இக்குழு ஒப்படைக்கும். அதனடிப்படையில் தேவையான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.