சென்னை: சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்து விட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இது குறித்த தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்தது. இந்தக் குழுவானது அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் குறை கூறியதுடன், ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை வேறு துறைக்கு மாற்றியது. ஆனால், நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து, நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், சிலைக் கடத்தல் பிரிவில் இருந்து பொன்.மாணிகவேலை மாற்றுவதற்கு தடை விதித்தது.
இதைத் தொடர்ந்து, சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ.,க்கு மாற்றுவதாக கடந்த ஆகஸ்ட்டில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட உயர் நீதிம்னற சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்து வந்தனர். விசாரணை முடிவில் ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் வழக்கில் சிபிஐ-யையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏற்பது தொடர்பாக சிபிஐயின் நிலைப்பாட்டை தெரிவிக்க கடந்த 11ஆம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுப்பு தெரிவித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகள் அதிகம் என்பதாலும், பணிச்சுமை அதிகம் இருப்பதாலும் இந்த வழக்கை ஏற்க இயலாது என்று கூறியுள்ள சிபிஐ., இருப்பினும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தாங்கள் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாம்.
இதை அடுத்து, சிலைக் கடத்தல் வழக்குகளை அவசர கதியில் சிபிஐ.,க்கு மாற்றுவதாக அரசாணை வெளியிட்டது ஏன் எனக் கேட்டு, தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் கோரிக்கை ஏற்று, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.




