புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற போது மீனவர் வலையில் தண்ணீரில் மிதக்கும் அதிசயக் கல் ஒன்று சிக்கியது. மணமேல்குடி அருகே உள்ளது பொன்னகரம் மீனவர் கிராமம். இங்கு தினசரி 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந் நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கடலுக்கு சென்று மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மீனவர் ஒருவர் வலையில், மீன்களுடன் சேர்ந்து ஒரு கல்லும் வந்தது. அந்தக் கல்லை எடுத்து அவர் தண்ணீரில் வீசியபோது அந்தக் கல் மிதந்தது. இதனால் ஆச்சரியம் அடைந்த அவர் அந்தக் கல்லை படகில் தூக்கிப் போட்டுக் கொண்டு கரைக்கு வந்தார். பின்னர் பொதுமக்களிடம் தண்ணீரில் கடலில் கண்டெடுக்கப்பட்ட மிதக்கும் கல் குறித்த அதிசயத்தை கூறினார். பின்னர் அந்தக் கல் அவ்வூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவில் வாசலில் உள்ள தெப்பக்குளத்தில் போடப்பட்டது. குளத்தில் போடப்பட்ட அந்தக் கல் தண்ணீரில் மூழ்காமல் மிதந்தது. இந்த அதிசயத்தைக் கேள்விப்பட்ட சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் ஏராளமானவர்கள் திரண்டு வந்து குளத்தில் மிதந்து கொண்டிருக்கும் அதிசயக் கல்லை ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். செய்தி: பொ.ஜெயச்சந்திரன், புதுக்கோட்டை
