சேலத்தில் ரவுடி கதிர்வேல் என்பவர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸார் மீது பயங்கர ஆயுதங்களால் தாக்கிய போது, தற்காப்புக்காக போலீஸார் சுட்டதில், ரவுடி உயிரிழந்தார்.
சேலம், வீராணத்தைச் சேர்ந்தவர் கதிர் வேல்! இவர் மீது 2 கொலை வழக்குகள், கொள்ளை மற்றும் ஆட்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் போலீஸார் கதிர்வேலைத் தேடி வந்தனர். மேலும், அண்மையில் காரிப்பட்டியைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி கணேஷ் என்பவர் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்யப் பட்ட வழக்கிலும் கதிர்வேலுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது
இதை அடுத்து சேலம் காவல் உதவி ஆணையர் சூரிய முர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில் கதிர்வேல் ரவுடிகள் சிலருடன் காரிப்பட்டியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் இன்று அதிகாலை காரிப்பட்டி ஆய்வாளர் சுப்ரமணி தலைமையில் போலீசார் அவர்களைப் பிடிக்கச் சென்றனர்.
அப்போது கதிர்வேல் உள்ளிட்டோர் ஆயுதங்களால் போலீசாரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆய்வாளர் சுப்ரமணியும் உதவி ஆய்வாளரும் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் தற்காப்புக்காக ஆய்வாளர் சுப்ரமணி துப்பாக்கியால் சுட்டதில் கதிர்வேல் உயிரிழந்தார். இதை அடுத்து அங்கிருந்த மூன்று ரவுடிகள் தப்பியோடினராம். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.




