ஈரோட்டில் கந்துவட்டி கழுத்தை நெருக்கியதால், ஜவுளித் தொழிலாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு அருகே, பழையபாளையத்தைச் சேர்ந்த ஜவுளித் தொழிலாளர் ஸ்ரீதர் என்பவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இதே பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 40 ஆயிரம் கடன் வாங்கினாராம். அதற்கு வட்டியாகவே ரூ.30 ஆயிரம் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில், மேலும் ரூ.30 ஆயிரம் உடனே செலுத்த வேண்டும் என்று அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீதரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஸ்ரீதர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதை அடுத்து, அவரது குடும்பத்தினர், அந்த கந்துவட்டி கும்பலை கைது செய்ய வலியுறுத்தி, உயிரிழந்த ஸ்ரீதரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




