
மனிதன் எப்போதும் பிரசாந்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புவான். ஆனால் அது வெளியில் கிடைக்கும் செல்வங்களாலும் பிற மனிதர்களின் தொடர்பாலும் கிடைக்கும் என்று எண்ணுகிறான். ஈஸ்வர பந்தம் மூலம் மட்டுமே நமக்கு சாந்தி, அமைதி, திருப்தி அனைத்தும் கிட்டும். அதன் மூலம் நம்மால் உலகிற்கு நன்மை கிடைக்கும்படி வாழ இயலும் என்பதை அறிய முடியும்.
இறைவன் ஒருவன் இருக்கிறான். அவன் நாம் இயற்றும் தர்ம, அதர்ம செயல்களை கவனிக்கிறான். எனவே அவனுடைய ப்ரீதிக்காக நாம் தர்மத்தோடு வாழ வேண்டும். அவனுடைய சந்தோஷத்திற்காக நாம் அதர்மம் செய்யாமல் இருக்க வேண்டும். இத்தகைய பாவனை ஏற்பட்டால் இதனையே ஆன்மீகம் என்கிறோம். இதனையே பக்தி என்கிறோம். எனவே நிரந்தரம் இறைவன் உள்ளான் என்ற நினைப்பு நமக்கு மிகவும் முக்கியம். அந்த நினைப்போடு வாழ்வதே உண்மையான இறை வழிபாடு.
இறைவன் இருக்கிறான் என்ற எண்ணத்தோடு வாழ்பவன் தவறு செய்வதற்கு தயங்குவான், பின்வாங்குவான். அதனால் சமுதாயத்தில் முடிந்தவரை ஆன்மீகத்தையும் இறை உணர்வையும் பரப்ப இயலுமாயின் அது அனைத்து தர்மங்களையும் காப்பாற்றிக் கொள்ளும். இது மிகவும் முக்கியமான அம்சம்.
இங்கு அறிய வேண்டியது என்னவென்றால் இறைவன் என்று கூறும் போது சிவனா? விஷ்ணுவா? கணபதியா? அல்லது வேறொரு தெய்வமா? என்று சண்டையிடத் தேவையில்லை. ஏனென்றால் நிறைய பேர் இத்தகைய தகராறில் ஈடுபடுவதால் இது ஒரு கலிதோஷமாக பார்க்கப்படுகிறது.
விஷ்ணு பக்தன் விஷ்ணுவே சிறந்த கடவுள் என்பான். அதுவரை சந்தோஷமே! ஆனால் சிவன் குறைந்தவன். விஷ்ணுவுக்கு சேவகன் போன்ற பாவனைகளில் திளைத்திருப்பான். இது போன்ற பேச்சுக்களை கூறுபவர்களில் சிலர் குரு வடிவில் தென்படுகிறார்கள். அவர்கள் கலி தோஷத்தை வியாபிக்கச் செய்கிறார்கள் என்று அறிய வேண்டும்.
இங்கு நாமனைவரும் அறிய வேண்டியது என்னவென்றால் இறைவன் ஒருவனே! அவன் சிருஷ்டி ஸ்திதி லயம் இவற்றுக்குக் காரணமான பரமாத்மா! அவனையே ஒவ்வொருவரும் ஒவ்வொரு மார்க்கத்தில் வழிபடுகிறார்கள். விஷ்ணு என்பர் சிலர். சிவன் என்பர் சிலர். அம்மன் என்பர் சிலர். கணபதி என்பர் சிலர். முருகன் என்பர் சிலர். ஒரு சிறிய சூத்திரத்தை நினைவில் வைத்துக் கொண்டால் போதும்.
நமக்கான இறைவனை நாம் இஷ்ட தேவதையாக ஏற்று பிறரின் பாவனைகளையும் கௌரவிக்க கற்றுக்கொள்ள வேண்டும். உபாசனை எளிமைக்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழி முறையை பின்பற்றுகிறார்கள். இந்த ஒரு கருத்தை ஒவ்வொருவரும் நினைவில் கொண்டால் அவர்களுக்கும் நன்மை. சனாதன தர்மத்திற்கும் நன்மை.
இத்தகைய விசாலமான பாவனையோடு நாம் பகவானை வழிபட்டால் இறைவன் நமக்கு எவ்விதமாக அருளுகிறான் என்பதை அறிய முடியும். உண்மையில் அனைத்து ஜீவர்களுக்கும் நிஜமான குரு, நிஜமான ஆத்மா, நிஜமான ஹ்ருதயம் இறைவனே! இது சத்தியம். இதை உணர வேண்டும்.
எனவேதான் கீதையில் கிருஷ்ண பரமாத்மா,
“கதிர்பர்தா ப்ரபு: சாக்ஷி நிவாச: சரணம் சுஹ்ருத் I
ப்ரபவ: ப்ரளய: ஸ்தானம் நிதானம் பீஜ மவ்யயம் II
-“இவை அனைத்தும் நானே என்று அறிவாயாக!” என்கிறான். இங்கு “நானே!” என்றால் இறைவன் என்று பொருள்.
இதே பாவனையை எடுத்துரைக்கும் ஸ்லோகம் ஸ்காந்த புராணத்தில் உள்ளது.
“சிவோ குரு: சிவோ தேவ: சிவோ பந்து: சரீரணாம் I
சிவ ஆத்மா சிவோ ஜீவ: சிவாதன்யன் ந கின்சனா II
மிக அற்புதமான இந்த ஸ்லோகம் கேட்பதற்கு சாதாரணமாக தென்படுகிறதே தவிர இதன் பாவனையை புரிந்து கொண்டால் எத்தனை ஆழமான பொருள் உள்ளது என்று அறிய முடியும்.
சகல உபநிஷத்துகளின் சாரத்தையும் இந்த ஒரு சுலோகத்தில் வைத்துள்ளார் வியாசபகவான். இதில் சிவா என்ற சொல் வந்துள்ளதால் இது ஏதோ பிடிக்காத சொல்லாக விஷ்ணு பக்தர்கள் நினைக்கக் கூடாது. அதேபோல் கீதையில் கிருஷ்ணர் கூறியுள்ளதால் அது ஏதோ பிடிக்காத சொல் என்று சைவர்கள் நினைக்கக் கூடாது.
சிவன் என்றாலும் விஷ்ணு என்றாலும் இறைவன் என்று பொருள் கொண்டால் நிம்மதியாக இருக்கும். “சிவோ குரு: சிவோ தேவ:” இந்த கூற்று மிக உயர்ந்த கருத்தை கூறுகிறது. நாம் பரமாத்மாவையே நிரந்தரம் அன்போடு வழிபட்டு வந்தால் சிறிது சிறிதாக இறைவனுக்கும் நமக்கும் அனுபந்தம் ஏற்படுகிறது. இந்தத் தொடர்பு புதிதாக எழுந்ததல்ல! ஏற்கனவே உள்ள உறவைத் தெரிந்து கொள்வதே! ஏனென்றால் இறைவனோடு அனுபந்தம் சகல ஜீவர்களுக்கும் உள்ளது. இறை பக்தர்களுக்கு மட்டுமே இறைவனோடு தொடர்பு இருக்கும் என்று எண்ண வேண்டாம். பக்தன் பகவானின் தொடர்பை அறிந்து கொள்வான். மீதி உள்ளவர்கள் அவ்வாறு உணர்ந்து கொள்ள மாட்டார்கள். வித்தியாசம் அவ்வளவுதான்!
இங்கு “சரீரணாம்” என்று கூறுகிறார். உடலெடுத்த ஒவ்வொருவருக்கும் “சிவோ குரு:” இறைவனே குரு! இறைவனே கடவுள்! இறைவனே உறவு! இறைவனே ஆத்மா! இறைவனே ஜீவன்!
இத்தனை விதமாகக் கூறுவதன் உட்பொருள் என்ன என்று ஆராய்ந்தால் உண்மையான உறவு இறைவன்தான்! உலகத்தில் உறவுகள் உள்ளன என்று நினைக்கிறோமே தவிர அவை நம் பிராரப்தத்தைப் பொறுத்து வரும், போகும்! ஆனால் இறைவனோடு உள்ள உறவு என்றும் நம்மை விட்டு விலகாது. உண்மையான உறவு கடவுளுடன்தான்!
அதேபோல் நம் அறிவை யாரோ தூண்டுவார்கள் என்று எண்ண வேண்டாம். நம் புத்தியை பிரசோதனம் செய்வது இறைவன் ஒருவனே! “அன்று ஒருவர் எனக்கு புத்தி கூறினார்! அன்று முதல் நான் மாறிவிட்டேன்!” என்று யாராவது கூறினால், அவர் கூறிய புத்திமதியை நீ கேட்டாலும், நல்லவிதமாக மாற வேண்டும் என்று உனக்குத் தோன்றி உன் அறிவைத் தூண்டியது இறைவனே என்று அறிய வேண்டும். எனவே நம் புத்திக்கு உயிர்ப்பு ஏற்பட வேண்டும்.
ஏனென்றால் மகான்கள் எத்தனையோ பேர் எத்தனையோ உபதேசங்களை செய்துள்ளார்கள். அனைவரும் அனைத்தையும் ஏற்று மாறுகிறார்களா என்ன? நம்முடைய புத்திக்கு ஒரு பிரேரணை வரவேண்டும். அந்தப் பிரேரணையை அளிப்பது யார்? இதயத்தில் விளங்கும் பரமாத்மா! அதனால் புத்திக்குத் தூண்டுதலை அளிப்பவர் குரு! ஒவ்வொருவர் இதயத்திலும் விளங்கி பிரேரணை ஏற்படுத்தும் இறைவனே குரு! அதனால் நம்முள்ளே குரு வடிவில் பகவான் இருக்கிறார் என்று பாவனை செய்து குருவான அவருக்கு நமஸ்காரம் செய்தால் நம் புத்திக்கு சரியான ஆலோசனை கூறி சரியான வழியைக் காட்டி அவரே புத்தியைத் தூண்டுவார்.
“சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதி ஞான மபோஹனம் ச I” என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் இதே வாக்கியத்தை கூறுகிறான்.
அதனால் இறைவனே நம் புத்தியை தூண்டி வழிகாட்டும் குரு! அவரே நமக்கு இறைவன். இங்கு இறைவன் என்னும் போது சர்வ சக்தி கொண்டவன், சுயம்பிரகாசமானவன் என்பதால் அவனே கடவுள்! “குரோ தேவ:”
முதலில் குருவாக! அடுத்தது கடவுளாக! மூன்றாவது “சிவோ பந்து:” இறைவனே உறவு! அடுத்தது “சிவ ஆத்மா”. இறைவனே அனைவருக்கும் ஆத்மாவாக உள்ளவன்.
“அஹமாத்மா குடாகேச சர்வபூதாசயஸ்தித:” என்று பகவத் கீதையில் ஸ்வாமி கூறியுள்ளான் அல்லவா! சகல ஜீவன்களின் உள்ளே ஆத்மாவாக உள்ளவன் அவனே!
இவ்வாறு நாம் தெரிந்து கொண்டே வந்தால் இறுதியில் இவற்றை அறிந்து கொண்ட ஜீவன் கூட இறைவனே என்பது புரியும். இது அத்வைத ஸ்திதி. அத்தகைய நிலையை அடைவதற்கு முன்பாக இறைவன் மேல் அன்பு கொண்டு வழிபட்டால் முதலில் அவனே குரு என்பது புரியும். பின்னர் அவனே இறைவன் என்பது புரியும். பின்னர் உறவு என்று புரியும். பின் ஆத்மா என்று புரியும். பின்னர் ஜீவனும் அவனும் ஒன்றே என்பது புரியும். இது புரிந்ததும் சர்வமும் இறைவனே என்பது புரியும்! இறைவன் அன்றி வேறு எதுவும் இல்லை என்று புரியும்.
இத்தகைய அற்புதமான ஸ்லோகத்தில் சர்வம் இறைமயம், ஈசாவாஸ்யமிதம் சர்வம் என்ற பாவனையை நமக்கு ஏற்படுத்திய வியாச மகரிஷிக்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



