தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது ஒரு பேனர் படம். அதில்,எங்கள் இல்ல திருமண விழா என்று கூறி, இளைஞர்கள் சிலரின் படங்கள் இருக்க, இடது புறம் தனியாக மணமக்கள் படம் இருக்க அதன் அருகே… உன் பொண்டாட்டி உனக்கு மட்டுமா பொண்டாட்டி, எங்களுக்கும் தான் பொண்டாட்டி! என்று ஒரு வாசகம் எழுதப் பட்டிருக்க… இது இப்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
வடிவேலு செந்தில் கவுண்டமணி காமெடி ஒன்று இது போல் சினிமாவில் வந்துள்ளது. என் ராசாவின் மனசிலே… படத்தில்,
வடிவேலு: அண்ணே… என் பொண்டாட்டி செத்துபோச்சுன்னே.
செந்தில்: கவலபடாத எல்லாம் நம்ம விதி படி தான் நடக்கும், உன் பொண்டாட்டி உனக்கு மட்டுமா பொண்டாட்டியா இருந்தா… எனக்கும் தான் பொண்டாட்டியா இருந்தா… அவ்வளவு ஏன் இந்த ஊருக்கே பொண்டாட்டிய இருந்தா…. என்று சொல்ல,
வடிவேலு: அடங்கொக்கமக்கா டேய்….. என்று எல்லோரும் சேர்ந்து செந்திலை பிளந்து கட்டுவார்கள்.
அந்த காமெடி ஷோ…
இப்போதெல்லாம் இந்த கவுண்டமணி செந்தில் காமெடி போல், வாழ்க்கையிலும் நடக்கத் தொடங்கி விட்டது போலிருக்கிறது. அண்மைக் காலமாக பேனர்கள் வைக்கும் கலாசாரம் அதிகரித்து வரவே, உயர் நீதிமன்றமே தலையிட்டு, பேனர்களை வைக்கக் கூடாது என்று உத்தரவு போடும் அளவு சென்றிருக்கிறது இந்தக் கலாசாரம்.
திருமணம், காது குத்து, பூப்புனித நீராட்டு என எந்த விழாவாக இருந்தாலும் உடனே பேனர் அடிக்கும் கலாசாரம் தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் தொற்றிக் கொண்டுள்ளது. இது கிராமப் புறங்களில் சற்று தூக்கலாகவும் இருக்கிறது. நடிகர், நடிகையர் படங்கள், அரசியல் கட்சித் தலைவர் படங்கள், சாமி படங்கள் என ஏதாவது அருகில் வைத்து பேனர் அடித்து ஊரைக் கூட்டுவார்கள்.
மற்ற எந்த விசேஷங்களின் பேனர்களிலும் எழாத பிரச்னை கல்யாண வீட்டு பேனரில் தூக்கலாக கொஞ்சம் தூக்கிவிடுகிறது. பார்ப்பவர் கவனத்தைக் கவரவேண்டும் எனும் நோக்கத்தில், வித்தியாசம் எனும் பேரில் எதையாவது ஏடாகூடமாக எழுதி வைத்து விடுகிறார்கள் பேனர்களில்.
அப்படித்தான் அண்மையில் சமூக வலைதளங்களில் ஒரு திருமண வீட்டில் வைக்கப்பட்ட பேனரின் புகைப்படம் வைரலானது. இதனை பலரும் பகிர்ந்து கொண்டு, நாம் எங்கே போகிறோம் என்றும், இளைய தலைமுறை இவ்வளவு கேவலமாகவா போக வேண்டுமென்றும் கருத்துகள் போடுகிறார்கள்.
இருக்காதே பின்னே…! “உன் பொண்டாட்டி உனக்கு மட்டுமா பொண்டாட்டி… எங்களுக்கும்தான் பொண்டாட்டி” என எழுதியிருந்தால்!
சகோதரி, தாய், சகோதரன் எனும் உறவு முறைகள் இவ்வாறு குறிப்பிடப் படுவது பெருமைக் குரியது. ஆனால் மனைவி ஆகப் போகிற ஒரு பெண்ணை இப்படியா இழிவுபடுத்துவது… அதுவும் நண்பனின் மனைவியை என்று கொதித்துப் போய் கேள்வி கேட்கிறார்கள் சமூக வலைத்தளங்களில். ஒருவேளை இது போட்டோஷாப் உத்தியாகவும் இருக்கலாம் என்றும், எந்த ஊர், தேதி, இடம் எதுவும் இல்லாமல் இருப்பதால் அத்தகைய செயலாகத்தான் இருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருப்போரும் உண்டு!