வீரமணி படத்தை செருப்பால் அடித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை : திராவிடர் கழகத் தலைவர் கீ. வீரமணி படத்தை செருப்பால் அடித்து இந்து முன்னணியினர் கோயில்களின் முன்னர் போராட்டம் நடத்தினர். சித்திரைத் திருநாளில் தாலியறுப்பு, கறியுண்ணல் நிகழ்ச்சி நடத்துவதாக அறிவித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை நகரில் இந்து முன்னணியினர் 20க்கும் மேற்பட்டோர் ஒரு குழுவாக நகரில் உள்ள ஒவ்வொரு கோயில்களுக்கு முன்னரும் சென்று வெளிப்புறத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, கி.வீரமணி படத்தை செருப்பால் அடித்து, தீயிட்டு எரித்து கோஷம் எழுப்பினர். மேலும், கோயில்களின் முன்னர் அமர்ந்து கி.வீரமணிக்கு நல்ல புத்தியைக் கொடு என்று பிரார்த்தனை செய்து அங்கிருந்து நகர்ந்தனர். இன்று காலை செங்கோட்டை சுந்தர்ராஜப் பெருமாள் கோயில் முன்னர் சித்திரை முதல்நாளில் பக்தர் கூட்டம் அதிகமாக இருந்தது. திடீரென இந்து முன்னணியினர் செய்த ஆர்ப்பாட்டத்தால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.