
அக்.9 உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியரிடம் அஞ்சல் அட்டையின் பயன்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரையைச் சேர்ந்த இளைஞர் அசோக்குமார்.
அக்.9 உலகம் முழுவதும் அஞ்சல் தினம் கொண்டாடப் படுவதை முன்னிட்டு, மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அசோக்குமார் இளைய தலைமுறை மாணவ மாணவியருக்கு இலவசமாய் அஞ்சல் அட்டை வழங்கி அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், நவீன தொழில்நுட்ப வசதிகள் வந்ததற்குப் பிறகு அஞ்சல் அட்டையின் பயன்பாட்டை முற்றிலுமாகத் மறக்கத் தொடங்கி விட்டனர். தற்போது உள்ள 40 50 வயது தலைமுறையினரே அஞ்சல் அட்டையை புறக்கணித்து விட்ட நிலையில் வருங்கால தலைமுறை மாணவ மாணவியரிடம் அதுகுறித்த தகவல் கூட சென்று சேர வாய்ப்பில்லை.
முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள நபர்கள் தங்களுக்கு கடிதம் வருகின்ற நாட்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது உண்டு. ஆனால் இப்போது அது தலைகீழாக மாறிவிட்டது.
இளைய தலைமுறையினருக்கு அஞ்சல் அட்டை மூலம் தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அஞ்சல் அட்டையை இலவசமாக வழங்கி ஊக்குவித்து வருகிறேன். அஞ்சல் அட்டையில் பயன்பாடு வருங்காலத்தில் அதிகரிக்க வேண்டும் என்பதே எனது இந்த பரப்புரையில் நோக்கம் என்றார்.
உலக அஞ்சல் தினம் கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் உள்ள உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்திடம் இந்த திட்டத்தை இந்திய தூதுக் குழுவின் உறுப்பினர் ஸ்ரீ ஆனந்த் மோகன் நருலா முதன் முதலாக முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய அஞ்சல் சேவைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. 150க்கும் மேற்பட்ட நாடுகள் உலக அஞ்சல் தினத்தை வெகு விமர்சையாக பல்வேறு வகையில் கொண்டாடி மகிழ்கின்றன. தங்கள் நாட்டின் அஞ்சல் ஊழியர்களை கௌரவித்தும் மகிழ்கின்றனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை