ஒன்றரை கோடி ரூபாய்… தெருவில் சிதற… தூக்கிய போலீஸ்! ரோந்துப் பணியால் தப்பிய பணம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

kotturpuram police crores - 2026

சென்னை கோட்டூர்புரத்தில் அதிகாலையில் மூன்று பைகளுடன் பைக்கில் சென்றவரை காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் துரத்தினர். அப்போது போலீஸாரிடமிருந்து தப்பிக்க பைக்கை வேகமாக ஓட்டினார் அந்த நபர்! அப்போது பைக்கிலிருந்த பைகள் கீழே விழுந்தன. அதில் கோடிக்கணக்கான ரூபாய் இருந்துள்ளது.

இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், சென்னை கோட்டூர்புரத்தில் சாலையில் வீசப்பட்ட ரூ.1.56 கோடி, நந்தனத்தில் உள்ள தொழிலதிபர் பாலசுப்ரமணியன் என்பவர் வீட்டில் அதிகாலையில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என தெரியவந்தது.

சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ராமு, ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் சக்திவேல், ஊர்காவல் படையைச் சேர்ந்த அண்ணசாமி ஆகியோர் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் காரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வரதாபுரம் அருகே உள்ள லாக் தெருவில் பைக் ஒன்று வேகமாகச் சென்றது. அதைப் பார்த்த போலீஸார் சந்தேகத்தின் பேரில் பைக்கை விரட்டினர். அப்போது, பைக்கிலிருந்து மூன்று பைகள் கீழே விழுந்தன. ஆனால், அதை பைக்கில் சென்றவர் எடுக்காமல் மின்னல் வேகத்தில் பறந்தார்.

பைக்கை பின்னால் விரட்டிச் சென்ற போலீஸார் அந்தப் பைகளை எடுத்து திறந்து பார்த்தனர். அந்த மூன்று பைகளிலும் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன.

இதுகுறித்து போலீஸார், உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது. கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்கு பணப் பைகள் கொண்டு வரப்பட்டன. அதிகாரிகள் முன்னிலையில் பைகளில் இருந்த ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன.

அதில் ரூ. 1,56,61,560 இரண்டு தங்க வளையல்கள் இருந்தன. ஆய்வாளரின் பொறுப்பில் பாதுகாப்பாக அந்த ரூபாயும் தங்க வளையல்களும் வைக்கப் பட்டன. தொடர்ந்து பைக்கில் சென்றவர்கள் யார், இந்தப் பணம் யாருடையது என்று கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

இது குறித்து போலீசார் கூறிய போது, பைக்கில் மூன்று பைகளுடன் ஒருவர் சென்றுள்ளார். போலீஸாரைப் பார்த்ததும் அவர் தப்பி ஓடியுள்ளார். வேகமாகச் சென்றதால் பைக்கிலிருந்து பைகள் ஒவ்வொன்றாக கீழே விழுந்துள்ளது. அதை எடுத்தால் அந்த நபர் எங்களிடம் சிக்கிக்கொண்டிருப்பார். இதனால்தான் எங்களிடமிருந்து தப்பிக்க அவர் கீழே விழுந்த பைகளை எடுக்காமல் தப்பிச் சென்றுள்ளார்.

கோடிக்கணக்கான ரூபாயை கீழே போட்டுவிட்டு தப்பிய நபரைத் தேடிவருகிறோம். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். அதில் பைக்கில் தப்பிச் செல்லும் நபரின் உருவம் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அடுத்தடுத்த சிசிடிவி கேமரா பதிவுகளை நாங்கள் ஆய்வு செய்துவருகிறோம். இதனால் அவர் எங்கு சென்றார் என்பதை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம் என்று கூறினர்.

இதனிடையே, போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், சென்னை கோட்டூர்புரத்தில் சாலையில் வீசப்பட்ட ரூ.1.56 கோடி, நந்தனத்தில் உள்ள தொழிலதிபர் பாலசுப்ரமணியன் என்பவர் வீட்டில் அதிகாலையில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என தெரிய வந்தது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.