ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளும் நிலைய மேலாளர்களும் புரியும் மொழியில் பேசலாம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

chennai central railway station - 2026

ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளும் நிலைய மேலாளர்களும் ஒருவருக்கொருவர் புரியும் மொழியில் பேசலாம் என்று தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரயில்வே துறையில் பெரும்பாலும் வடநாட்டைச் சேர்ந்தவர்கள் பணிக்கு விண்ணப்பித்து தேர்வெழுதி சேர்ந்துவிடுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஹிந்தி மொழி அல்லது தங்கள் தாய் மொழி அறிந்த வடமாநிலத்தவராகவே இருக்கிறார்கள். இதனால் மொழி தெரியாமல் அதிகாரிகளுக்குள் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக, ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும், நிலைய மேலாளர்களுக்கும் இடையே மொழித் தொடர்பில் புரிந்துணர்வு இன்மை நிலவுகிறது.

அதே போல், ஹிந்தி மொழி தெரியாத தமிழகம் போன்ற மற்ற மொழி மாநிலங்களில், தொடர்பு மொழி பிரச்னை ஏற்பட்டு, கீழ் நிலை ஊழியர்களில் இருந்து அதிகாரிகள் வரை புரிந்துணர்வு இன்மை ஏற்படுகிறது.

அண்மையில் மதுரை அருகே செங்கோட்டை – மதுரை, மதுரை -செங்கோட்டை இரு பயணிகள் ரயிலும், சிக்னல் தொடர்புக்காக நின்று கொண்டிருந்த போது, ரயில் நிலைய அதிகாரி மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு இடையே மொழிப் பிரச்னை ஏற்பட்டதால், சொல்வதைத் தவறாகப் புரிந்து கொண்டு, ஒரே லைனில் இரு ரயில்களையும் விட்டனர். இதனால் பெரும் பிரச்னை ஏற்பட்டது. அருகே வந்த ரயில்கள் டிரைவர்களின் சாதுரியத்தினால் திடீரென நிறுத்தப் பட்டு, பெரும் சேதம் தவிர்க்கப் பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்நிலையில், இதற்கு சரியான தீர்வு குறித்து யோசிக்கும் படி தெரிவிக்கப் பட்டது.

இதனிடையே, ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகள் – நிலைய மேலாளர்கள் தமிழில் பேசக்கூடாது என்றும், ஹிந்தி, அல்லது ஆங்கிலத்தில் தகவல் தொடர்பை பயன்படுத்துமாறும் தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்ததாகக் கூறப் பட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதை அடுத்து, தமிழகத்தில் தமிழில் பேசத் தடையா என்று அரசியல் ரீதியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அது தவறுதலாக வந்த உத்தரவு என்றும், அந்த உத்தரவில் மாற்றம் செய்யப் பட்டு வெளியிடுவதாகவும் கூறிய தெற்கு ரயில்வே, ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளும் நிலைய மேலாளர்களும் ஒருவருக்கொருவர் புரியும் மொழியில் பேசலாம் என்று விளக்கம் அளித்தது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.