விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 7 குழந்தைகள் உயிரிழப்பு!

villupuram gh விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மேலும் 3 குழந்தைகள் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2 ஆண் குழந்தைகள் உள்பட 3 குழந்தைகள் உயிரிழந்ததால், குழந்தைகளின் தாய் மற்றும் உறவினர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. புதன்கிழமை நேற்று விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 குழந்தைகள் உயிரிழந்தன. இந்தச் சம்பவம் விழுப்புரம் உள்பட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மேலும் 3 குழந்தைகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கத்தில், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்குள்ள குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளில் 7 குழந்தைகள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தன. இந்தக் குழந்தைகளில் உளுந்தூர்பேட்டை- ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜனார்த்தனனின் 27 நாள் ஆன பெண் குழந்தை, திருக்கோவிலூர்- ரங்கராஜநல்லூரைச் சேர்ந்த இளையராஜாவின் 3 நாள் ஆண் குழந்தை, திருக்கோவிலூர் ஏமபேர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷின் 4 நாள் ஆண் குழந்தை, சங்கராபுரம்- சீர்பனந்தலைச் சேர்ந்த முனியனின் 3 நாள் ஆண் குழந்தை என 4 குழந்தைகள் புதன்கிழமை அடுத்தடுத்து உயிரிழந்தன. குழந்தைகள் இறப்பு குறித்து, மருத்துவமனை மருத்துவர்கள் கூறியபோது, இறந்த குழந்தைகளில் 3 குழந்தைகள் எடை குறைவாக பிறந்திருந்தன. அந்தக் குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளன. மற்றொரு குழந்தை பிறந்து 27 நாள்கள் ஆகியிருந்தது. அந்தக் குழந்தையை பெற்றோர் வீட்டுக்கு எடுத்துச் சென்றிருந்தனர். பின்னர், உடல் நலம் பாதிக்கப்பட்டு மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இந்தக் குழந்தைக்கு கிருமி தொற்று ஏற்பட்டிருந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் அந்தக் குழந்தை இறந்துவிட்டது என்று கூறினர். ஆனால், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உஷா சதாசிவம் இது குறித்துக் கூறியபோது, குழந்தைகள் எடை குறைவாகப் பிறந்திருந்தன. அந்தக் குழந்தைகளுக்கு நாங்கள் தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தைகளைக் காப்பாற்ற முடியவில்லை. ஒரே நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததால் இது பெரிதாகப் பார்க்கப்படுகிறது என்றார். இந்நிலையில், இன்று காலை வரை அங்கே சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 குழந்தைகளும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.