அதிமுகவுடன் கூட்டணியா?: வாய்ப்பில்லை என்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

கோயமுத்தூர் : அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடி பிரதமரான பின், தமிழகத்தில் பாஜக உறுப்பினர்களாக இணைபவர்கள் எண்ணிக்கை, பல மடங்காக அதிகரித்துள்ளது. ஐந்து மாதங்களில் சுமார் 33 லட்சம் பேர் இணைந்துள்ளனர். தேர்தலைச் சந்திக்கும் வல்லமையும், துணிவும் பாஜக., மற்றும் அதன் கூட்டணிக்கு உள்ளது. எனவே, அதிமுக.,வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். மேலும், பொள்ளாச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்படும்; கோவை மேற்கு மண்டலத்தில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். நிலம் கையகப்படுத்தும் மசோதா, குறைகள் களையப்பட்டு, மாற்றங்களுடன் நிறைவேற்றப்படும். நிலத்தின் சந்தை மதிப்புக்கு ஏற்றதுபோல், இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகள் நிச்சயமாக இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள். கையகப்படுத்தப்படும் நிலம் தனியாருக்கு அளிக்கப்படாது; அரசு மற்றும் பொதுத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்… என்றார்.