பயங்கரவாத தொடர்பு: கைதானவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ., சோதனையில் சிக்கிய ‘ஏராளமான’ எலக்ட்ரானிக் பொருள்கள்!

Published:

nellai nia search - 2026

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நடத்திய சோதனையில் மின்னணு சாதனங்கள், ரகசிய தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவை கைப்பற்றப் பட்டுள்ளன.

அன்சாருல்லா எனும் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக தில்லியில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சோதனை நடத்தப் பட்டு வருகிறது.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன், அன்சாருல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகார் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக நாகையில் மஞ்சக்கொல்லை, சிக்கல் ஆகிய ஊர்களில், ஹாரிஸ் முகமது, அசன் அலி ஆகியோரது வீடுகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அன்சாருல்லா அமைப்பைச் சேர்ந்த 14 பேர் துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப் பட்டனர். பிறகு அவர்கள் தில்லியில் கைது செய்யப்பட்டனர். சென்னை, நெல்லை, மதுரை, பெரம்பலூர், ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அவர்கள், கடந்த திங்கள்கிழமை அன்று விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

நாகையில் கைது செய்யப்பட்டவர்களையும் சேர்த்து 16 பேரையும் எட்டு நாள் காவலில் எடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

nia - 2026தொடர்ந்து, பிடிபட்ட 14 பேரது வீடுகளில் போலீஸ் பாதுகாப்புடன், என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பிராட்வே, மதுரை நரிமேடு, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, பெரம்பலூர் மாவட்டம் லெப்பை குடிகாடு, தேனி, நெல்லை மேலப்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள 14 பேரது வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே திருவாரூர் முத்துப்பேட்டையில், அகமது அசாருதீனின் வீட்டின் பூட்டை உடைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீடு பூட்டப்பட்டிருந்த காரணத்தால், உறவினர்கள், போலீசார், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். முன்னதாக, அதிகாரிகள் கொண்டு வந்த பொருட்களையும், அவர்களது உடைமைகளையும் கிராம நிர்வாக அலுவலர் சோதனையிட்டார்.

இதை அடுத்து அகமது அசாருதீனின் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், ஒரு ஐபோன், சிம் கார்டு, குறுந்தகடுகள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இதேபோல் நாகை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனை நடந்தது. அவரது வீடு 15 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்ததால், ஊர்மக்கள், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் வீடு திறக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை!

இதனிடையே, கைதான 14 பேரில் 5 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் வீடுகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. மயிலாடுதுறை, நெல்லை மேலப் பாளையம் ஆகிய இடங்களில் இன்று காலை முதல் நடத்தப் பட்ட சோதனைகளில் ஏராளமான மின்னணு சாதனங்கள், லேப்டாப்கள், 7 செல்போன்கள், 5 சிம்கார்டுகள், 3 மெமரிகார்டுகள், ஹார்ட் டிஸ்குகள், பென் டிரைவ்கள் உள்ளிட்டவை கைப்பற்றப் பட்டுள்ளன.

இது குறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்த போது, கைப்பற்றப்பட்ட மின்னணு பொருள்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் படும், பின்னர் அவை சைபர் ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப் பட்டு, அவற்றில் உள்ள தகவல்கள் ஆய்வு செய்யப் படும் என்று கூறினர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Related articles

Recent articles

spot_img