விழுப்புரம் மருத்துவமனையில் 8 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு; அமைச்சர் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 பச்சிளம் குழந்தைகள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தொடர்ந்து உயிரிழந்தன. அந்த மருத்துவமனைக்கு அமைச்சர் நேரில் சென்று விசாரித்தறிந்தார். விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டில் அனுமதிக்கப்படிருந்த சீர்ப்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்த முனியன்-கோவிந்தம்மாள் தம்பதியரின் 4 நாள் ஆன ஆண் குழந்தை, ஏமப்பேரைச் சேர்ந்த ராகேஷ்-பார்வதி தம்பதியரின் 2 நாள் ஆன ஆண் குழந்தை, கெங்கராயநல்லூரைச் சேர்ந்த இளையராஜா-கலா தம்பதியரின் ஆண் குழந்தை, உளுந்தூர்பேட்டை ஜனார்த்தனன்-இந்திரலேகா தம்பதியின் பெண் குழந்தை ஆகியவை புதன்கிழமை அதிகாலை அடுத்தடுத்து உயிரிழந்தன. இதை அடுத்து சென்னையில் இருந்து மருத்துவக் குழுவினர் இங்கே ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் தொடர்ச்சியாக குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கராபுரம் கடம்பூரைச் சேர்ந்த பரத்-ரேவதி தம்பதியரின் 12 நாள் ஆன ஆண் குழந்தை புதன்கிழமை மாலையிலும், சாலாம்பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்-ரம்யா தம்பதியரின் 17 நாள் ஆன ஆண் குழந்தை இரவிலும் உயிரிழந்தது. பின்னர் விருத்தாசலத்தை அடுத்த தொட்டில்மேட்டைச் சேர்ந்த சிவசக்தி-முருகன் தம்பதியரின் 4 நாள் ஆன பெண் குழந்தை இரவு 11 மணியளவில் இறந்தது. இந்த மூன்று குழந்தைகளும் குறைப் பிரசவத்தில் எடைக் குறைவாகவும், மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அன்பு புதன் அன்று தனது பெண் குழந்தையை இங்கே சேர்த்துள்ளார். அவரது குழந்தையும் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளது. இதயத் துடிப்பு குறைவாக இருந்த நிலையில், அது உயிரிழந்துள்ளது. இவ்வாறு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரு நாள்களில் அடுத்தடுத்து 8 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இங்கே சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகமானால் மேல் சிகிச்சைக்குக் கொண்டு செல்ல வசதியாக இன்குபேட்டர் வசதியுடன் கூடிய 2 ஆம்புலன்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தை அடுத்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வு-குடும்ப நலத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்து பார்வையிட்டனர். உடனடியாக மருத்துவர்களிடம் விவாதித்தனர். பின்னர் குழந்தைகள் வார்டுக்குச் சென்று சிகிச்சை பெறும் குழந்தைகள் உடல்நிலை குறித்து இருவரும் கேட்டறிந்தனர்.