
திருவனந்தபுரம் அருகே திருமணத்திற்கு தடையாக இருந்த காதலியை ராணுவ வீரர் கொன்று பிணத்தை நிர்வாணமாக புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம் அருகே உள்ள வெள்ளறடையை அடுத்த பூவார் புத்தன் கடை பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் ராக்கி மோள், (வயது 30).
இவர் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு வயர் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
ராக்கிமோளும் அவரது உறவினரான காட்டாக்கடை அம்புரி பகுதியைச் சேர்ந்த அகில் (27) என்பவரும் காதலித்து வந்துள்ளனா். அகில் டெல்லியில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வழக்கம்போல வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற ராக்கிமோள் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இதனால் பதறிப்போன அவரது பெற்றோர் மகளை தேடினார்கள். அவரது செல்போனுக்கு பேசியபோதும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் மகள் மாயமானது பற்றி அவர்கள் வெள்ளறடை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு ராக்கிமோள் மாயமான வழக்கில் தற்போது துப்பு துலங்கி உள்ளது.
ராக்கிமோளை அவரது காதலன் கொன்று பிணத்தை தோட்டத்தில் புதைத்த திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் அகில் தனது காதலி ராக்கிமோளை அழைத்துக் கொண்டு அகில், பல்வேறு இடங்களுக்கும் உல்லாச பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் திடீரென்று ராக்கிமோளை சந்திப்பதை அகில், தவிர்த்து வந்தார். அவர் போன் செய்தால் கூட அதை அவர் எடுத்து பேசவில்லை.
இதனால் அகிலை நேரில் சந்தித்து அதுபற்றி ராக்கிமோள் கேட்டார். அதற்கு அவர் சரியான காரணத்தை கூறாமல் அவரை திருப்பி அனுப்பி விட்டார்.
இந்த நிலையில் அகிலுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து திருமண ஏற்பாடுகள் நடப்பதும், அதன் காரணமாகவே ராக்கி மோளை சந்திப்பதை அகில், தவிர்த்ததும் தெரிய வந்தது.
இதனால் ராக்கிமோள், நேராக பெண் வீட்டிற்கு சென்று அவர்களிடம் தானும் அகிலும் காதலிப்பது பற்றியும், தன்னை ஏமாற்றி விட்டு அகில் அவர்கள் மகளை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளது பற்றியும் கூறி நடக்க இருந்த திருமணத்தை தடுத்து விட்டார்.
இது குறித்து அகிலுக்கு தகவல் தெரிய வந்ததும், ராக்கிமோள் மீது ஆத்திரமடைந்தார்.
இதனையடுத்து தனக்கு இடையூறாக இருக்கும் காதலி ராக்கிமோளை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி, தனது நண்பரான ஆட்டோ டிரைவர் ஆதர்ஷ் என்பவரது ஆட்டோ மூலம் ராக்கிமோளை ஏமாற்றி தனது வீட்டு தோட்டத்திற்கு அழைந்து வந்துள்ளார்.
பிறகு காதலி ராக்கிமோள், அகிலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. பின்னர் அகில், ராக்கிமோளை கொன்று அவரது பிணத்தை தோட்டத்தில் பள்ளம் தோண்டி, நிர்வாண நிலையில் புதைத்துள்ளார்.
அதன் பிறகு டெல்லியில் ராணுவ பணிக்கு சென்று விட்டார்.
போலீசார் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியபோது,
ஆட்டோ டிரைவர் ஆதர்சை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த போது இந்த கொடூர கொலை பற்றி தெரிய வந்துள்ளது.
ஆதர்சை போலீசார் தங்கள் பிடியில் வைத்துதொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான அகில் டெல்லியில் இருப்பதால் அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
அகிலின் அண்ணன், ராகுல் அந்த பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.
அவரும் ஸ்டூடியோவை மூடி விட்டு தலைமறைவாகி உள்ளார்.
அவருக்கும், இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
மேலும் அகிலின் தோட்டத்தில் புதைக்கப்பட்ட ராக்கிமோளின் பிணத்தை போலீசார் தோண்டி எடுத்தனர்.
அழுகிய நிலையில் மீட்கப்பட்ட அவரது பிணத்தை பிரேத பிரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ராக்கிமோளின் பிணம் நிர்வாணமாக மீட்கப்பட்டதால் அவர் கற்பழித்து கொல்லப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



