அத்திவரதர் வைபவம்: 20க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கி காயம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

kanchipuram athivarathar electircshock - 2026

விஷ்ணுகாஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில், அத்திவரதர் வைபவத்தில் மின்சாரம் தாக்கி பக்தர்கள் 20 பேர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். இதனால் காஞ்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அத்திவரதர் சயனக் கோலத்திலும் தொடர்ந்து ஆக. 1ம் தேதி முதல் நின்ற நிலையிலும் தரிசனம் அளித்து வருகிறார். சயனக் கோலத்தில் பெருமாளை தரிசிக்க வந்தவர்களை விட நின்ற கோலத்தில் காட்சி தரும் வரதராசப் பெருமாளை தரிசிக்க ஒவ்வொரு நாளும் அன்பர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அருகில் உள்ள ஊர்களில் இருந்து மட்டுமல்ல, வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் பக்தர்கள், முதல் நாள் நள்ளிரவே கோயில் பகுதியில் வரிசையில் நின்று விடுகின்றனர். அதிகாலை கோயில் திறந்ததும் அத்திவரதரை தரிசிக்க ஆவலுடன் முண்டியடித்துச் செல்கின்றனர்.

அத்திவரதர் வைபவத்துக்கு இவ்வளவு அதிக அளவில் பக்தர்கள் தரிசிக்க வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் திட்டமிடலும் இல்லாததால், மாவட்ட நிர்வாகமும், அறநிலையத்துறையும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தாலும் அது போதுமானதாக இல்லாததால் பிரச்னையை சந்தித்து வருகின்றன.

ஒவ்வொரு நாளும், கூட்ட நெரிசலில் முண்டியடித்துக் கொண்டு செல்வதால், பக்தர்கள் சிலருக்கு மயக்கம் ஏற்படுகிறது. நெரிசல், துர்நாற்றம், வியர்வை என சிரமத்தை அனுபவித்து வருகின்றனர் பக்தர்கள்! இருந்த போதும், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதுவும் 48 நாட்கள் தான் என்பதால், அத்திவரதரை தரிசிக்கும் ஆர்வம் மட்டும் அன்பர்களிடம் குறையவே இல்லை.

நின்ற நிலையில் அத்திவரதர் தரிசனம் தந்த முதல் நாள் அன்பர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால் அதன் பின்னர் சராசரியாக 3 லட்சம் பக்தர்கள் கடந்த சில நாட்களில் வந்துள்ளனர்.

athivarathar aug5 - 2026இன்றும் அத்திவரதரை தரிசிக்க ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால் நெரிசல் காணப் பட்டது. குறிப்பாக, விஐபி.,க்கள் வெளியே வரும் வழியில் பொது வழியில் செல்லும் பலர் முண்டியடித்து முன்னேறினர். .இதனால் காலை குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில், விஐபி.,க்கள் வரிசையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு, மின்சாரம் தாக்கியது. இதனால் பதற்றம் ஏற்பட்டது. மின்சாரம் பாய்ந்ததில் 20 பக்தர்கள் காயமடைந்தனர். அவர்களில் அதிக பாதிப்புக்கு உள்ளான 5 பேர் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினரும் அடங்குவர்!

athivarathar aug5a - 2026முன்னதாக, காஞ்சி அத்தி வரதரை தரிசிக்க பொள்ளாச்சியில் இருந்து வந்து இலவச தரிசனத்தில் கிழக்கு கோபுரம் பகுதியில் வரிசையில் நின்று கொண்டிருந்த போது லட்சுமணன் (70) என்ற முதியவர் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.