சென்னை: எஸ்.ஆர்.எம்., குழு தலைவரும், ஐ.ஜே.கே., கட்சி தலைவருமான பச்சமுத்துவை இன்று சென்னை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வேந்தர் மூவிஸ் மதன் சமீபத்தில் மாயமானார். இவரை கண்டு பிடித்து தருமாறு சென்னை ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட் மதனுக்கு நெருக்கமான பச்சமுத்துவிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என கேள்வி எழுப்பியது. இதன் படி நேற்று இரவு முதல் பச்சமுத்துவிடம் சென்னை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இன்று ( 26 ம்தேதி ) பச்சமுத்துவை போலீசார் கைது செய்தனர். மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் ரூ.72 கோடி வரை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மருத்துவ சீட் கேட்டு 102 மாணவர்கள் புகார் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை மோசடி செய்ததாக இவர் மீது ஜாமினில் வெளி வர முடியாத வழக்கு பதியப்பட்டுள்ளது. மருத்துவ சீட் கேட்டு பலர் மதன் மூலம் பணம் கொடுத்ததாகவும் சிலர் புகார் தெரிவித்திருந்தனர்.
அவர் 406 மற்றும் 420 IPC பிரிவின் கீழ் கைது செய்யப்படுவதாகவும், அல்லிகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாகவும் தகவல் வெளியானது.
முன்னதாக, வேந்தர் மூவிஸ் – தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் மதன் சில மாதங்களுக்கு முன்பு ‘தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக’ கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானார். அந்தக் கடிதத்தில் மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கித்தருவதாக 102 பேரிடம் 72 கோடி ரூபாய் வசூல் செய்து அதனை பச்சமுத்துவிடம் கொடுத்ததாக எழுதியிருந்தார்.
இது தொடர்பான வழக்கில் பச்சமுத்துவை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதை அடுத்து நேற்று மாலை முதல் சுமார் 15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதன் முடிவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



