அதிமுக., அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக் குழு கலைப்பு: ஓபிஎஸ்

சென்னை

panneerselvam tn - 2026

சென்னை:
அதிமுக., இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை குழு கலைக்கப்படுகிறது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சென்னை திருவேற்காட்டில் நடந்த அதிமுக., புரட்சித் தலைவி அம்மா அணியின் சார்பில் நடைபெற்ற மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஓபிஎஸ்., இதனைத் தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாகப் பிளவுபட்ட அதிமுக., மீண்டும் இணைவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. சசிகலா குடும்பம் ஓரங் கட்டப்பட்டதை அடுத்து இப்போது ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிகள் அடுத்தடுத்து அணிகளை இணைக்கும் முயற்சிகளை செய்து வந்தன. இதற்காக இருதரப்பிலும் பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டன.

சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளையும் ஏற்றால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓ.பி.எஸ். அணி சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இரு அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் மாற்றி மாற்றி கருத்துக்களை தெரிவித்ததால் பேச்சுவார்த்தை தொடங்குவதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில் அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை குழு கலைக்கப்படுகிறது என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

ஓபிஎஸ் பேசுகையில், அதிமுக இணைப்பு அணிகள் இணைப்பு தேவையில்லை என்று மக்கள் விரும்புகின்றனர். நான் செல்லுகிற இடமெல்லாம் தாய்மார்கள், மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் கட்சி இணைப்பு தேவையில்லை என்று கூறுகின்றனர். அதனால் அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்குழு கலைக்கப்படுகிறது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.