தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கை யில் எடப்பாடி பழனிசாமியின் கருத்தை ஆணையம் திரித்து கூறியுள்ளது . ஸ்டெர்லைட போராட்டத்தில் மிஷனரி குரூப்க்கு சம்பந்தம் இருப்பதாக அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. போராட்டத்தை தூண்டிவிட்ட குற்றவாளிகள் சர்வதேச அளவில் இருந்தாலும் சரி, அதை கண்டுபிடிக்க வேண்டும். என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை அறிக்கை தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:- தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் 5 ஆண்டுகாலம் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ‘கிணத்தை காணோம்’ என்ற வடிவேலு காமெடிபோன்று இருக்கிறது. ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு காரணமானவர்கள் யார்? என்பது ஆணைய அறிக்கையில் தெளிவாக இல்லை. ஒருபுறம் காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. அது சரியான நடவடிக்கையா தவறான நடவடிக்கையா? என்பது விவாதத்திற்குரிய விஷயம். துப்பாக்கி சூடு ஒருவர் நடத்தியிருக்கலாம். இதில் ஒரு செயின் ஆப் கமாண்ட் இருக்கிறது. ஒரு ஐஜி, டிஐஜி, எஸ்பி என செயின் ஆப் கமாண்டில் அனைவர் மீதும் துறைரீதியான நடவடிக்கையை பரிந்துரை செய்திருப்பது பாஜக ஏற்றுக்கொள்ளாது.
செயின் ஆப் கமாண்டில் இருக்கக்கூடிய அதிகாரிகள் என்றால், ஏன் டிஜிபி மீது நடவடிக்கை இல்லை? ஏன் ஏடிஜிபி மீது நடவடிக்கை இல்லை? அப்படியே இழுத்துக்கொண்டே சென்றால் யாராவது ஒரு காவலர் தனக்கு கிடைத்த கவலை தவறாக பயன்படுத்தி துப்பாக்கியால் 17 முறை சுட்டிக்கிறார். அது தவறுதான். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா அதிகாரிகள் மீதும் நடவடிக்கை என்றால் இது எங்கே போய் நிற்கும்? இது டிஜிபி அலுவலகம் வரை வந்து நிற்கும்.
இந்தியாவில் இதைப்போன்ற நடவடிக்கையை எங்கேயும் பார்த்ததில்லை. யார் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக எல்லா போலீஸ் அதிகாரிகளையும் பலிகடா ஆக்குவேன் என்று கமிஷன் சொல்லியிருப்பதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. இதில் மிஷனரி குரூப்க்கு சம்பந்தம் இருப்பதாக அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. அதைப்பற்றி ஊடகங்கள் இன்றும் அதிகமாக பேசவேண்டும். ஏனென்றால் கூடங்குளம் போராட்டம் நடக்கும்போது மன்மோகன் சிங் இதை வார்த்தையை சொன்னார். கூடங்குளம் போராட்டம் தூண்டப்பட்டதாக கூறினார். ஸ்டெர்லைட்டுக்கும் அதேதான் நடந்திருக்கிறது.
அதைப்பற்றி இந்த ஆணையம் சுட்டிக்காட்டவில்லை. பொத்தாம்பொதுவாக ஒரு வரியில் மிஷனரி தொடர்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மிஷனரியை ஒருங்கிணைத்தது யார்? பணம் எங்கே இருந்து வந்தது? சம்பளமாக தினமும் எத்தனை பேருக்கு கொடுக்கப்பட்டது? அதைக் காணோம். எனவே, இந்த விசாரணை அறிக்கையைப் பொருத்தவரை, ஆசையைக் காட்டியிருக்கிறதே தவிர, உண்மையை அதில் காட்டவில்லை.
எனவே, இதை மாநில அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளாமல் அறிக்கையில் உள்ள பாயிண்டுகளை ஆராய்ந்து, தூண்டிவிட்ட குற்றவாளிகள் சர்வதேச அளவில் இருந்தாலும் சரி, அதை கண்டுபிடிக்க வேண்டும். தூத்துக்குடி வன்முறை தொடர்பாக ரஜினி கூறிய கருத்தில் தவறு இல்லை. கையில் ஒரு கல்லை எடுத்து எறிந்தால் எங்கள் அகராதியில் சமூக விரோதி தான். எனவே, பொது சொத்துகளை சேதாரம் செய்தார்கள் நாங்கள் சமூக விரோதி என்றோம். திருமாவளவன், சீமான், கனிமொழி, மு.க.ஸ்டாலின் இவர்கள் எல்லாம் கருத்து சொல்லவில்லையா? ஆனால் காவல் துறை அறிக்கை வந்தால் அது வேறு மாதிரிதான் இருக்கும்.ரஜினிகாந்த் கருத்து பற்றி ஆணையம் சொல்லிய கருத்தை பாஜக எதிர்க்கிறது.
துப்பாக்கி சூடு பற்றி எடப்பாடி பழனிச்சாமி தொலைக்காட்சியில் பாரத்ததாக சொன்னார். அது எப்படி தவறு என சொல்ல முடியும்? அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த போராட்டத்தில் பல தகவல்களை டிஜிபி, தலைமைச் செயலாளர் ஆகியோர் முதலமைச்சருக்கு கொடுத்திருக்கலாம். ஆனால், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை தொலைக்காட்சியில் பார்த்ததாக கூறியதை வைத்து எடப்பாடி பொய் சொன்னார் அல்லது வேண்டுமென்றே வார்த்தையை மாற்றி சொன்னார் என ஆணையம் கூறியிருக்கிறது.
அதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அப்படி பார்த்தால் ஒரு முதலமைச்சர் எடுக்கும் முடிவை கேள்வி கேட்பதற்கு ஆணையத்திற்கு என்ன உரிமை இருக்கிறது? அந்த தருணத்தில் முடிவு எடுத்திருக்கிறார். நாங்கள் ஏற்கனவே சொன்னதுபோல் துப்பாக்கி சூடு நடத்தியது சரியா? எங்களுக்கு தெரியாது. அந்த நேரத்தில் காவல்துறைக்கு வேறு வாய்ப்பு இல்லை, நடத்தியிருக்கிறார்கள். துப்பாக்கி சூடு நடத்திய விதம் தவறு. ஆனால், எடப்பாடி சொன்ன ஒரு கருத்தை திரித்து சொல்வது சரி இல்லை. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
