
பாஜக.,வைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள் (நடிகைகள்) குறித்து அறுவெறுப்பாகப் பேசிய திமுக., நிர்வாகி சைதை சாதிக்கைக் கைது செய்யாத தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஆர்.கே.நகர் மேற்கு பகுதியில் சில தினங்களுக்கு முன் நடந்த திமுக., கூட்டத்தில் பேசிய திமுக., பேச்சாளரும், சென்னை தெற்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளருமான சைதை சாதிக், பாஜக., பெண் நிர்வாகிகளான நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கௌதமி ஆகியோரைக் குறித்து அறுவெறுக்கத் தக்க வகையில் பேசியது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து தமிழக பாஜக., சார்பில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதை அடுத்து இதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து சைதை சாதிக் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், சைதை சாதிக்கின் பேச்சைக் கண்டித்தும் கைது செய்து நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும், பாஜக., மகளிரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அண்ணாமலை உள்ளிட்ட பாஜக.,வினரை போலீசார் கைது செய்தனர்.