
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய அரங்கத்திற்குள் நடத்த அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், கடுமையான ஒழுங்குடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிகளை நடத்த அனுமதிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று, தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அதையடுத்து உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுக்கு உட்பட்டு பேரணி நடத்திக்கொள்ள உத்தரவிட்டது.ஆனால், பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதால் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 3 இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களுக்கு போலீஸார் மீண்டும் அனுமதி மறுத்ததால் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்களைத் தவிர்த்து மற்ற 41 இடங்களி்ல் சுற்றுச்சுவருடன் கூடிய உள்ளரங்குகள் அல்லது விளையாட்டு மைதானங்களில் அணிவகுப்பு பேரணியை நடத்திக் கொள்ள உத்தரவிட்டார்.
ஆனால், அதையேற்க மறுத்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், அணிவகுப்பு பேரணியை ரத்து செய்தனர்.இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்திருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.மேலும், கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் செயல்பட வேண்டும் என தமிழக அரசிற்கு அறிவுறுத்தியுள்ளனர் நீதிபதிகள்.
கடுமையான ஒழுங்குடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிகளை நடத்த அனுமதிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டனர்.ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்கவும், அந்த விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலித்து விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று தேதிகளில் ஏதாவது ஒரு தினத்தில் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு காவல் துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.