
தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட முயற்சியாக மிகப்பெரிய அளவில் பணம் விளையாடி வரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அறப்போர் இயக்கம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து இன்று புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அறப்போர் இயக்கம் சார்பில், சத்தியபிரதா சாகுவிடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்காளர்களுக்கு ஏராளமான பணம் கொடுக்கப்பட்டிருப்பதால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.
பணத்தைத் தவிர்த்து, குக்கர், கொலுசு, புடவை என வாக்காளர்களுக்கு, கட்சிகள் தரப்பில் ஏராளமான பரிசுப் பொருள்களும் வாரி வழங்கப்பட்டுள்ளன. பரிசுப் பொருள்கள் மற்றும் பணம் கொடுப்பதை விடியோ எடுக்கும் ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி மக்கள் சுயமாக வேட்பாளரை தேர்வு செய்யும் வகையில் நடைபெறாது. பண சக்திதான் தேர்தலை இயக்கும். எனவே, இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





