
மே மாத அக்னி நட்சத்திர வெயில் காலம் முடிந்து வழக்கம் போல் ஜூன் மாத முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். அதன்படி, வரும் ஜூன் 2 திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் கன மழையும் மிக கன மழையும் பெய்து வருகிறது. இதன் முன்னோட்டமாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் ஆரஞ்ச் அலர்ட், ரெட் அலர்ட் என்று விடப்பட்டிருந்தது.
இதனால் பள்ளித் திறப்பு ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்று சமூகத் தளங்களில் செய்தி பரவியது. இதற்கு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
பள்ளிகள் வருகிற 2-ம் தேதி திறக்கப்பட இருப்பதாக மாநில அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், கனமழை தொடர்வதால், பள்ளித் திறப்பு ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
இதுகுறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஜூன் 2-ம் தேதி பள்ளித் திறப்பு உறுதி, ஜூன் 9 திறப்பு என்பது வதந்தி என்று தகவல் சரிபார்ப்பகம் கூறியுள்ளது.
இதனிடையே, சென்னை மற்றும் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்து சேவைகளை அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கோடைக்கால விடுமுறை முடிந்து ஊர்களுக்குத் திரும்ப வசதியாக, பல்வேறு இடங்களில் இருந்தும் வார இறுதி நாட்களான இன்றும், சனிக்கிழமை நாளை மற்றும், ஞாயிற்றுக் கிழமையிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.





