
நீதிமன்ற தீர்பை மீறி முருக பக்தர்களை அவமதித்த தமிழக அரசைக் கண்டித்து 7.12.25 – ஞாயிறு இன்று மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று, அறிவித்துள்ள இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், முருக பக்தர்களை திரண்டு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். இது குறித்து முன்னர் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது…
கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசு மக்களின் பக்தியை அவமதித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். உயர்நீதிமன்றம் 3 முறை தீர்ப்பு வழங்கியும் அவற்றை சிறிது கூட மதிக்காமல் அரசியல் சாசனத்திற்கு எதிராக காவல்துறையை செயல்பட்டு வருகிறது. காவல்துறை மீது அழுத்தம் கொடுப்பது அப்பட்ட அரசியல் நோக்கம் என்பதை மக்கள் அறிந்துள்ளனர்.
ஆனால் ஜனநாயகத்தின் ஒரு முக்கிய கூறான நீதிமன்றத்தினை இழிவு படுத்துவது நீதியின் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இந்துக்களின் நம்பிக்கைகள் மீதும் மற்றும் நீதியரசர்கள் மீதான தனிப்பட்ட அவதூறுகளைப் பரப்புவதிலும் எல்லை மீறியுள்ளது. திருப்பரங்குன்றம் மலை தீபத்திற்கான போராட்டத்தை விமர்சனம் செய்வது தேசத்தின் விடுதலையை கொச்சை படுத்துவது போலாகும்.
குறிப்பாக திமுக எம்பி கனிமொழி வெளி ஆட்கள் போராடுகிறார்கள் என பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. உலக பிரசித்திபெற்ற திருப்பரங்குன்றம், முருகனின் முதல் படைவீடு. அதன் பாரம்பரியத்தை காப்பாற்ற போராடுவது ஒவ்வொரு முருக பக்தர்களின் கடமை. ஒவ்வொரு தமிழனின் தன்மானம் ஆகும். தமிழக மக்கள் அனைவருக்கும் இதற்காக போராட முழு உரிமை உள்ளது.
திமுகவின் இந்து விரோத நடவடிக்கைகளை திசை திருப்ப பல்வேறு தில்லுமுல்லு வேலைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
உயர்நீதி மன்ற தீர்ப்பை செயல்படுத்துவது தான் காவல்துறை அதிகாரியின் பணி. அந்த உத்தரவின் மீது மேல்முறையீடு செய்வது அரசின் அல்லது அரசுத் துறை நடவடிக்கை ஆகும். ஆனால் அதனை செயல்படுத்துவதற்கு முன்பே காவல்துறை நீதிமன்ற உத்தரவை அனுமதிக்காமல் முட்டுக்கட்டை போட்டு நடந்து கொண்டது கடமை தவறிய நடவடிக்கை. ஒட்டுமொத்த நீதித்துறை செயல்பாட்டை முடக்கும் சதி. மேலும் தமிழக அரசும் கூட்டணி கட்சிகளும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் முன்னுக்கு பின் முரணாக பேசி வருகின்றன.
கடந்த 1996- இல் உயர் நீதிமன்றம் திருப்பரங்குன்றம் மலைமீது கோவில் நிர்வாகம் தீபம் ஏற்ற தீர்ப்பு வழங்கியது.
அடுத்து 2014- இல் நீதிமன்றம் மலைமீது எங்கும் தீபம் ஏற்றலாம். அதனை கோவில் நிர்வாகம் செய்யலாம் என்று கூறியது.
2015- இல் தர்கா நிர்வாகம் ஆட்சபணை இல்லை என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத கையாலாகாத கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையை எதிர்த்து தான் இப்போதைய வழக்கு நடந்து அதில் தீர்ப்பு கூறப்பட்டது.
இந்நிலையில் பழைய தீர்ப்பை பின்பற்றுகிறோம் என மாநில சட்ட அமைச்சர் ரகுபதி அவர்கள் பேசுவது எத்தகைய அறிவீனமான செயல். ஒவ்வொரு பிரச்சினையிலும் பழைய தீர்ப்பை அல்லது நடைமுறையை பின்பற்றுவோம் என்று கூறினால் அறநிலையத்துறை எதற்கு நிர்வாகம் செய்ய வேண்டும்? என்பது ஒவ்வொருவரின் கேள்வியாக உள்ளது.
தமிழக அரசு முருக பக்தர்களை, உலகத் தமிழர்களை, இந்துக்களை, அரசியல் சாசன சட்டத்தை அவமதித்துள்ளது. மக்களின் உணர்வுகளை புண்படுத்தி வருகிறது.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் செய்துள்ள மேல் முறையீட்டை சட்டரீதியாக இந்து வழக்கறிஞர்கள் சந்தித்து நீதியை நிலைநாட்ட போராடுவார்கள்.
உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?
திமுகவின் மக்கள் விரோத, சட்ட விரோத செயல்பாட்டை கண்டித்து வருகின்ற ஞாயிறு (7-12-2025) அன்று பக்தர்களை இணைத்து மாநிலம் தழுவிய மாபெரும் அறப்போராட்ட ஆர்ப்பாட்டமானது அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.
இந்த மக்கள் போராட்டத்தில் முருக பக்தர்கள், சிவனடியார்கள் மற்றும் அனைத்து ஆன்மீக குழுக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறோம். தமிழக அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் நமது உரிமையை புரிய வைப்போம்..
வீரவேல்.. வெற்றி வேல்..




