ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை தேவை: ராம.கோபாலன்

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
 
ஆலயங்களுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாட்டை விதித்து மதுரை உயர்நீதி மன்றம் உத்திரவிட்டுள்ளதை இந்து முன்னணி வரவேற்கிறது. பொது இடங்களில் நாகரிகமாக உடை அணிவது பண்பாடு. ஆனால் மேற்கத்திய கலாச்சாரத் தாக்கத்தால் நடை, உடை, பாவனை மாறிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் கேந்திரமாக விளங்கும் இந்து கோயில்களில் ஆடை கட்டுப்பாடு விதிப்பது அவசியமானது. நமது பண்பாட்டில் ஊறிய விஷயங்கள் மாறிப்போகும்போது சட்டத்தின் துணைகொண்டு இதனை செயல்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது. 
 
ஆடைக் கட்டுப்பாட்டை அறநிலையத்துறை முழுமையாக நிறைவேற்ற, மக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக சுற்றுலாத் தலமாக, யாத்திரைத் தலமாக விளங்கும் முக்கிய ஊர்களில் இது குறித்து மக்களின் கவனத்தை கவரும் வகையில் விளம்பரப் படுத்த வேண்டும். அங்கு மக்களுக்குத் தேவைப்பட்டால், உடை மாற்றும் இடம், வாடகைக்கு தூய்மையான உடை முதலானவை ஏற்பாடு செய்து தர வேண்டும்.
 
மேலும், வருகின்ற ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டில் நள்ளிரவில் ஆலயங்கள் வழிபாட்டிற்குத் திறப்பது ஆகம விதிகளுக்குப் புறம்பானது. நள்ளிரவில் தனியார், அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோயில்களிலும் திறக்கக்கூடாது என இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. மார்கழி என்பதால் விடியற்காலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்படும். அப்போது குடும்பத்தோடு வந்து வழிபாடு செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதைவிடுத்து கிறிஸ்தவ சர்ச் போல நள்ளிரவில் கோயில் திறப்பது என்பதை இந்து முன்னணி வன்மையாக் கண்டிக்கிறது. மீறித் திறந்தால் இந்து முன்னணி  ஜனநாயக வழியில் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
ஜனவரி 1இல் ஜன்னி காய்ச்சல் வந்ததுபோல நள்ளிரவில் இளைஞர்களும் இளம்பெண்களும் வீதியில் உலாவதை காவல்துறை தடுக்க வேண்டும். குடித்துவிட்டு கும்மாளமிடுவதையும், வாகனம் ஓட்டுவதையும், பைக் ரேஸ் போன்றவை ஆபத்தான விஷயங்கள் நடத்துவதும் சட்டவிரோதம் என எச்சரிக்கை விளம்பரம் செய்ய வேண்டும். மீறுபவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். நள்ளிரவில் பட்டாசு வெடிப்பதை உச்சநீதி மன்றம் தடை செய்துள்ளது. மீறி வெடி வெடிப்போர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
மக்களின் முழுமையானப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காவல்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகங்களும் ஜனவரி 1இல் நடைபெறும் கலாச்சார சீரழிவு குறித்தத் தகவல்களை காவல்துறைக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.