
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை அமைப்பதற்கான திட்டத்தை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்பதற்கு உச்ச நீதிமன்றம் விதித்த 6 வார ‘கெடு’ முடிந்த நிலையில், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், இதற்கு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாகவும் ஆளும் அதிமுக., சார்பில் ஏப்.2ம் தேதி நடத்தப் படுவதாக அறிவிக்கப் பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஏப்.3ம் தேதிக்கு மாற்றப் பட்டுள்ளது.
மதுரையில் அதிமுக., திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி ஏப்ரல் 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக தரப்பிலான உண்ணாவிரத போராட்ட தேதி மாற்றப்பட்டு உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகம், புதுச்சேரியில் அதிமுக சார்பில் ஏப்ரல் 3ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



